17/09/2020

குறளுரையாடல் 10

  


#குறளுரையாடல்_10
#தொடர்_உரையாடல்_பகுதி
#மருத்துவர்_ஐயாவுடன்
#குறள்_வெண்பாவில்

(இம்முறை சற்று காலதாமதமாகி விட்டமையால் கருவை விட்டு சற்றே விலகிவிட்டது. மாற்றி எழுதலாம்தான், ஆனால் இயற்கைப்பேறாக இல்லாமல் போய்விடுமே என்ற யோசனையில், வந்தது எதுவோ அதையே வழங்குகிறோம். அடுத்த முறை அப்படி மாறாமல் பார்த்துக்கொள்கிறோம்.)

#ஐயா_1
ஐந்தாம்* அதிகாரம் ஐயனின் சாரத்தை
ஏந்தியிங்கு நிற்கும் எழில்

(திருக்குறளில் இல்வாழ்க்கை ஐந்தாம் அதிகாரம்)

#நான்_2
எழில்மிகு வெண்பாவில் எல்லாமும் வைத்து
மொழிந்தாரே வள்ளுவரும் அன்று

#ஐயா_3
அன்று மொழிந்த அனைத்துக் குறளமுதும்
இன்றும் பொருந்தும் இனிது.

#நான்_4
இனிய திருக்குறளை எல்லோரும் கற்றால்
புனிதமாய் மாறும் புவி

#ஐயா_5
புவிக்குப் பொதுமொழி புத்தம் புதிதாய்
கவிக்கும் குறள்களைக் காண்.

#நான்_6
காண்கின்ற ஆழத்தால் கைதூக்கிச் சொல்கின்றார்
மாண்புமிகு வள்ளுவர்க்கு வாழ்த்து

#ஐயா_7
வாழ்வின் நெறியறிய வள்ளுவம் கற்றறிந்தால்
தாழ்வை உளமறியா தாம்

#நான்_8
தாம்தூம் எனத்திரியும் தன்னடக்கம் இல்லார்க்கு
நாம்சொல்லும் வள்ளுவமும் நஞ்சு

#ஐயா_9
நஞ்சென்ப(து) ஆசையாம் நன்றாய் அழியமனம்
அஞ்சாமல் கல்வள்ளு வம்

#நான்_10
வம்பை விலைகொடுத்து வாங்கிடுவோர் முன்பாக
சும்மா இருந்தால் சுகம்

#ஐயா_11
சுகமான வாழ்வென்றால் சும்மா யிருக்கும்
அகமென எண்ணல் அழகு

#நான்_12
அழகினைத் தேடி அலைவோரே கேளும்
அழகென்றும் நம்முள்தான் ஆய்

#ஐயா_13
ஆய்வு முடிய அகமும் தெளிவாகும்
ஓய்வு நிலையதுவாம் ஓங்கு

#நான்_14
ஓங்கி அடித்தவுடன் உட்செல்லும் ஆணிபோல்
வாங்கிப் படித்தால்தான் வாழ்வு

#ஐயா_15
வாழ்வின் பொருள்நான் வளர்ந்து விரியும்நாம்
தாழ்வின் பொருள்சுருங்கும் தான்

#நான்_16
தானே உயர்வென்று தன்னையே போற்றுவோர்
வீணே உழல்வோர் விடு

#ஐயா_17
விடுதல் எனப்படுதல் வீண்முயற்சி அல்ல
எடுத்த தவம்முடித்தல் கேள்

#நான்_18
கேள்விகளாய்க் கேட்போர்க்கேக் கிட்டுகிற
காரணத்தை
ஆழ்மனத்தில் ஏற்றி அறி

#ஐயா_19
அறிதல் நிகழ அகம்மூடித் தேடல்
நெறிகள் புகட்டும் நெறி

#நான்_20
நெறிமுறை மீறாமல் நிற்கின்றோர் சொல்லும்
அறிவுரைகள் என்றும் அறம்

✍️ஐயாவுடன் நான்

No comments: