28/09/2020

சக்கரம்

 


அற்புதக் கண்டுபிடிப்பே
இந்தச் #சக்கரம்...
 
இது..
குயவரின் சக்கரமாய்ச் சுழன்றபோது
நெளிந்த பானைகளை
நிமிர வைத்தது
உருளும் சக்கரமாய்ச் சுழன்றபோது
நிமிர்ந்த மனிதனை
நகர வைத்தது..
 
பின்னர்...
மெதுவாய் நகர்ந்த சக்கரம்
வேகமாய்ச் சுழன்றபோது
மரச்சக்கரம்
இரப்பர் சக்கரமானது 

மனித வாழ்க்கையும்
மறுவடிவம் பெற்றது...
 
தரையில் ஓடிய சக்கரங்கள்
தலைதூக்கியபோது
விமானங்களாய்
விண்ணில் உலாவியது.‌
 
விசைச் சக்கரங்கள்
வேகமாய் இயங்கியபோது
இயந்திரக் கப்பல்களாய்
கடல் கிழித்தது...
 
ராட்டைச் சக்கரத்தால்
ஆடை பிறந்தது..
டர்பைன் சக்கரத்தால்
மின்சாரம் பிறந்தது..
 
ஒவ்வொரு சக்கரமும்
ஒவ்வொன்றை உருவாக்க
சுதர்சனச் சக்கரமாய்
சுழன்றது மனித வாழ்வு..
காலத்தின் சக்கரத்தில்
பேரண்டம் முதல்
அணுத்துகள் வரை
அத்தனையும்
ஆச்சரியச் சக்கரங்களே.‌
 
பிறவியின் சக்கரத்தில்
உயர்திணை முதல்
அஃறிணை வரை
அத்தனையும்
சூட்சமச் சக்கரங்களே..
 
அசோகச் சக்கரமோ
நடராஜ சக்கரமோ
எல்லாம்
தத்துவம் போதிக்கும்
தர்மச் சக்கரங்களே....
 
இங்கே
சக்கரங்கள் வெறும்
சக்கரங்கள் அல்ல...
சக்கரங்கள் எல்லாம்
சக்தி மையங்கள்...
உயர நோக்குங்கள்....
சூரியச் சக்கரம் தெரியும்
உயிரில் நோக்குங்கள்
மூலச் சக்கரம் புரியும்..
 
இப்போது சொல்லுங்கள்!
சுற்றும் சக்கரங்கள்
பம்பரம் என்றால்
சுழற்றும் சாட்டையென்பது
பரம்பொருள் தானே...?!!
 
✍️செ.இராசா

No comments: