13/09/2020

கர்நாடக இசை-1

 அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் வணக்கம்,

இது"#கர்நாடக_இசை" பற்றிய எனது பார்வையிலான ஒரு கட்டுரை. பொதுவாக கர்நாடக இசை என்றவுடனே இது ஏதோ கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தது போல என்றுதான் நினைப்போம். ஆனால் இது முழுக்க முழுக்க தமிழ்நாட்டுக்குச் சொந்தமான இசை வடிவமே. காவேரிக் கரையினை ஆண்ட மன்னன் பின்னாளில் கரைநாட்டு மன்னன் என அழைக்கப்பட்டு கர்நாடக மன்னன் என அழைக்கப்பட்டான், கரை நாட்டு இசையாக அழைக்கப்பட்டு கர்நாடக இசை ஆனது என்பது ஒரு ஆய்வு செய்தி. பிறகு ஏன் அனைத்துக் கலைச்சொற்களும் சமஸ்கிருதத்தில் உள்ளது?. ஆம், உண்மைதான், கருநாடக இசை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குள் சென்றபோது அனைத்துச் சொற்களும் மாறிவிட்டது.

சிந்துபாவியல் இலக்கணம் என்ற புத்தகம் சமீபத்தில் படித்தேன். அதில் உள்ள இசைக்குறியீடுகள் அனைத்தும் தமிழில் தான் உள்ளன. ஒரு சந்தேகத்திற்காக youtube காணொளி தேடியபோது என் பல சந்தேகங்களுக்கு விடை கிட்டியது. அதாவது ஸ்வரம், சுருதி, ராகம், தாளம்.....இப்படி. உண்மையில் இவை எல்லாவற்றிற்கும் தமிழ்ப்பெயர் இருந்தாலும், இப்போது இவ்வார்த்தைகள் எல்லாம் கர்நாடக இசைக்கான கலைச்சொற்களாகிவிட்டன. நிற்க!

இசைக்கு மொழி தேவையில்லைதான், இருப்பினும் நம்மிசையை நம்மவர்கள் அனைவரும் அறியாமல் போனதும் மற்றவர்கள் சொந்தம் கொண்டாடுவதும் மிகவும் வேதனையே....

பெரும்பாலான சினிமா பாடல்கள் கருநாடக இசையமைப்பில் உள்ளதால் அதைபற்றி தெரிந்து கொள்ள முற்பட்டதால் இக்கட்டுரை உருவானது.

நாம் இப்போது ஒரு பாடலுக்கான கட்டமைப்பு பற்றி பார்ப்போம்!

* பாடல் என்பது வெறும் ராகமாக தனித்தோ அல்லது தாளத்துடன் சேர்ந்தோ வரும். தமிழில் சொல்வதானால்"பண்ணுடன் நடப்பன பண்ணும் தாளமும் நண்ணி நடப்பன என இரண்டு இசைப்பா"

* ராகம் என்றால் என்ன?

ஏழு ஸ்வரங்களின் (ச ரி க ம ப த நி) ஒருங்கிணைப்பை மாற்றி மாற்றி சில விதிகளுக்குள் அமைத்தால் ராகம் பிறக்கின்றது. கோபம், அழுகை, மகிழ்ச்சி....என ஒவ்வொரு ராகமும் ஒவ்வொரு உணர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. மொத்தம் 72 ராகங்கள் உள்ளன. (ச ரி க ம ப த நி ----தமிழில்---குரல்,துத்தம், கைக்கிளை, உழை,இளி, விளரி, தாரம்)

ஏழு ஸ்வரங்களும் (ச ரி க ம ப த நி) சரியான சுருதியில் இருக்க வேண்டும். இது என்ன புது வார்த்தை சுருதி? இந்த சுருதி நாதத்தில் இருந்து வருகிறது. (ஆகா...சும்மா இருங்க தல. ஒன்னும் புரியல....)ஒன்னும் இல்லீங்க....தொண்டையைத் திறக்கும்போது பாடுறமாதிரி திறந்தா வர்ற ஒலி நாதம். கழுதை மாதிரி திறந்தால் இரைச்சல். அந்த நாதத்தை ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் ஏற்றியோ இறக்கியோ வைப்பது சுருதி. ராகம் மாறாமல் பாடுவதற்கு பாடகர் சுருதியை மாற்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். (தம்புரா மற்றும் சுருதிப்பெட்டி வைத்து மாறாமல் பார்த்துக்கொள்வார்கள்) (பிட்ச் அல்லது சுருதி எல்லாம் ஒன்றே)

* தாளம் என்றால் என்ன?

காலத்தைக் கணக்கிடும் போது நாம் எப்படி மணி, நிமிடம், நொடி...என்றெல்லாம் சொல்கின்றோமோ, அதே போல் இசைக்கான கால அளவீட்டை தாளம் என்று சொல்கின்றோம். மீட்டருக்குள் ஸ்வரங்களை அடுக்க தாளம் உதவுகிறது. (ரிதம் தாளம் எல்லாம் ஒன்றே) ஏழு அடிப்படைத் தாளங்கள் உள்ளன. மேலும் இதில் மூன்று வகையான அங்கங்கள் (மாத்திரைபோல்) உள்ளன. அவற்றை மாற்றி மாற்றி போட்டு தாளம் உருவாகின்றது.

நாம் தமிழில் மீட்டருக்குள் நேரசை நிரையசை பார்த்து எழுதும்போதே அமைத்துவிடலாம். நமக்கு சரிகமபதநி எல்லாம் தெரியாது. ஆனாலும் சரியாக வந்துவிடும் என்பது என் திண்ணம்.

--செ. இராசமாணிக்கம்--

No comments: