22/09/2020

ஆத்திச்சூடி-2 உயிர்_மெய்_வருக்கம்

 


 

#ஆத்திச்சூடி_விளக்கம்_பகுதி_2
#குறள்_வெண்பாவில்_தெளிவுரை
#உயிர்_மெய்_வருக்கம்

#கண்டொன்று_சொல்லேல்_1
கண்டதை விட்டுவிட்டு கண்டபடி வேறொன்றைத்
தன்போக்கில் சொல்லல் தவறு

#ஙப்போல்_வளை_2
வளைந்து குனிந்து வணங்கிடும் ஙப்போல்
நிலையில் பணிந்து நிமிர்

#சனி_நீராடு_3
எண்ணெய்க் குளியலிலே எச்சூடும் ஓடுவதால்
என்றும் சனியில் குளி

#ஞயம்பட_உரை_4
உரைக்கும் கருத்தை உளறாமல் நன்றாய்
உரைக்கும் உரையே உரை

#இ_டம்பட_வீடு_எடேல்_5
நீள அகலத்தை நீட்டித்துக் கட்டாமல்
ஆளின் அளவறிந்து கட்டு

#இ_ணக்கம்_அறிந்து_இணங்கு_6
நல்லுறவு யாரென்று நன்றாக ஆராய்ந்து
நல்லோரின் சுற்றத்தை நாடு

#தந்தை_தாய்ப்_பேண்_7
தந்தைதாய் சந்தித்துத் தந்ததை சிந்தித்து
பிந்தைநாள் நன்றாகப் பேண்

#நன்றி_மறவேல்_8
நன்றியுடன் உள்ளவரே நன்றாக வாழ்வதால்
நன்றி மறவாமை நன்று

#பருவத்தே_பயிர்_செய்_9
செய்கின்ற காலத்தில் செய்வதை செய்திட்டால்
செய்யும்முன் வென்றதாம் செய்

#மண்_பறித்து_உண்ணேல்_10
நிலத்தை அபகரித்து நிர்வாகம் செய்து
பலனாய் வருமுணவு பாழ்

#இ_யல்பு_அலாதன_செய்யேல்_11
இயற்கை நிகழ்வின் இயல்பை நினைந்தோர்
நியதியில் செய்யார் பிழை

.#அ_ரவம்_ஆட்டேல்_12
பாம்பாக மாறுவோர் பக்கத்தில் வந்தாலே
வீம்பாக மாறும் விலகு

#இ_லவம்_பஞ்சில்_துயில்_13
இலவமர பஞ்சின்மேல் எப்போதும் தூங்க
பலநோய்கள் ஓடிவிடும் பார்

#வஞ்சகம்_பேசேல்_14
வஞ்சகமாய்ப் பேசி வலைவீச எண்ணினால்
வஞ்சகமே வாசல் வரும்

#அ_ழகு_அலாதன_செய்யேல்_15
அழகாகச் செய்தால் அழகாகும்; ஆக
அழகில்லா செய்கை அகற்று

#இ_ளமையில்_கல்_16
இளமையில் கற்றால் எளிதாக ஏற்கும்
அளப்பரிய சக்தி அறிவு

#அ_றனைமறவேல்_17
அறமே இறையாக ஆய்ந்திட்ட ஒன்றை
மறவாமை வேண்டும் மனம்

#அ_னந்தல்_ஆடேல்_18
தூக்கம் மிகுந்தாலும் துக்கமே என்றுணர்ந்து
தூக்கத்தை நீட்டாமல் துய்

✍️செ.இராசா

No comments: