09/09/2020

குறளுரையாடல்-9, மறைந்த கவிஞர் A Thirugnanam ஐயா அவர்களுக்கு இக்குறள்கள் அனைத்தும் சமர்ப்பணம்

 


#குறளுரையாடல்_9
#தொடர்_வெண்பா_உரையாடல்
#மருத்துவர்_ஐயாவுடன்_நான்

#ஐயாவும்_நானும்_1
சான்றாக வாழ்வோரே சான்றோர் அகிலத்தில்
ஆன்றோர் வடிவத்தில் அன்பு

(முதல் அடியை நான் தொடங்க ஐயா முடித்து வைத்தார்கள்)

#நான்_2
அன்பே இறையின் அருவ உருவமாம்
அன்பால் அவனை அறி

#ஐயா_3
அறிய முடியா அரும்பொருளை உள்ளம்
அறிதல் தமிழின் அருள்.

#நான்_4
அருளுடைமை சொல்லும்முன் அன்புடைமை ஏனோ?!
அருளுடைமை அன்பின் விரிவு

#ஐயா_5
விரிதலே வாழ்க்கை விரிசல் விடாத
புரிதலே வாழ்வாம் புரி.

#நான்_6

புரியாமல் பேசிப் புலம்புவார் முன்னே
விரிவாகச் சொல்லுதல் வீண்

#ஐயா_7
வீணாக வாழ்வை விரயம்செய் தால்பாரில்
காணாமல் போவாய்கண் காண்.

#நான்_8
காண்கின்ற அத்தனையும் காட்சிப் பிழையென்றால்
காண்பவரின் கண்தான் பிழை

#ஐயா_9
பிழையைப் பொறுத்து பிழையுணரச் செய்வாய்
பிழைப்பையும் ஈவாய்ப் பிறகு.

#நான்_10
பிறகு பிறகென்று பின்தள்ளிப் போட்டால்
சிறப்பேதும் இல்லை தெளி

#ஐயா_11
தெளிந்த பிறகு தெவிட்டாத ஞானம்
எளிய உளத்தின் எழில்.

#நான்_12
எழில்மிகு வாழ்க்கை எளிதில் அமைய
எளிமையாய் வாழப் பழகு

#ஐயா_13
பழகிப்பார் ஈர்க்கும் பழந்தமிழின் ஆர்வம்
அழகாய்ப்பார் செந்தமிழின் அன்பு.

#நான்_14
அன்புடன் ஆற்றும் அறச்செயல் யாவிலும்
என்றுமே நிற்பான் இறை

#ஐயா_15
இறைக்கும் நமக்கும் இடையே தமிழ்தான்
மறையாமல் நிற்கும் மறை.

#நான்_16
மறைக்க முடியுமா மாண்புடையோர் நட்பைப்
பறைபோல் முழங்கிடும் பார்

#ஐயா_17
பார்க்கும் உலகைப் பரிவுடன் ஏற்கவரும்
ஆர்க்கும் புகழை அறி.

#நான்_18
அறிவால் விலகும் அறியாமை போல
இறையால் விலகும் இடர்

#ஐயா_19
இடரும் தடையை விலக்கி அருளால்
தொடரும் இறையைத் தொழு.

#நான்_20
தொழுகின்ற தெய்வமாய்த் தொண்டாற்று வோரைத்
தொழுவதே நன்றாம் தொழு

✍️செ.இராசா

(மறைந்த கவிஞர்

ஐயா அவர்களுக்கு இக்குறள்கள் அனைத்தும் சமர்ப்பணம்)

No comments: