28/05/2020

தாடி



#தாடி வளர்ப்பதை விடுத்து
மூளையை வளருங்கள்..
இது...
தெரிந்த குரல்களின்
தெளிவில்லா வாதம்

உண்மையைச் சொல்லுங்கள்
உள்ள அறிவுக்கு
உரமூட்ட முடியும்; ஆனால்
உள்ளே ஹார்மோனுக்கு
உயிரூட்ட முடியுமா?

தானாய் வளரும் ஒன்றை
நாமாய் வளர்க்க முடியுமா? இல்லை
வைத்ததாய்ச் சொல்லும் ஒன்றை
வளர்த்ததாய்ச் சொல்ல முடியுமா?

எனில் ஏன் வைத்தீர்கள்
இந்த சோகமான தாடியை?

தாடி என்றால் சோகமா?
இது..
சினிமாவில் சொன்ன சித்தாந்தம்
சிக்காதவன் சொன்ன வேதாந்தம்

தோற்றவனின் அடையாளமெல்லாம்
தோல்வியின் அடையாளமல்ல..
சோம்பேறித்தன அடையாளமெல்லாம்
சோகத்தின் அடையாளமல்ல..

விஞ்ஞானியின் தாடி
முடிவெட்ட நேரமின்றி
முயற்சித்ததன் அடையாளம்

மெய்ஞானியின் தாடி
அலங்கார போகமின்றி
அகங்கண்டதன் அடையாளம்

சித்தனின் தாடி
சிரைக்கும் எண்ணமின்றி
சிந்தித்ததன் அடையாளம்

பித்தனின் தாடி
சிந்தனையே ஏதுமின்றி
சிதைந்ததன் அடையாளம்..

பிச்சைக்காரனின் தாடி
வழிக்க வழியின்றி
வாழ்வதன் அடையாளம்..

எனில்.
தாடி முகமூடி இல்லையா?!
தாடி சிலருக்கு முகமூடிதான்
ஆனால்...
முகமூடிகளே முகமில்லையே

தாடிகள் எல்லாம் தாகூரா
மீசைகள் எல்லாம் பாரதியா
---இது கவிஞர் வைரமுத்து
கற்பனை மூடர்களுக்குக்
கடிவாளமிட்ட கூற்று

மழித்தலும் வேண்டாம்
நீட்டலும் வேண்டாம்
---இது பாட்டன் வள்ளுவன்
போலித் தாடிகளுக்குப்
பாடை கட்டிய கூற்று

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்..
சாக்ரடீஸின் தாடி முதல்
பெரியாரின் தாடி வரை
வள்ளுவரின் தாடி முதல்
வேதாத்திரியின் தாடி வரை
தாடிகளுக்கே பெருமை தவிர
தாடிகளால் பெருமை அல்ல...

வையுங்கள் தாடி
வாழ்ந்ததன் அடையாளமாய்
வைக்காதீர் தாடி
வளர்ந்ததன் அடையாளமாய்...

✍️செ.இராசா

காணொளியாய்க்காண இங்கே சொடுக்கவும்

https://www.facebook.com/1529793087155445/posts/1919386788196071/?sfnsn=mo&d=n&vh=e

#குறிப்பு

என் டாடி என்று சொல்லாத
என் பிள்ளைகள் இன்று
ஏன் தாடி என்று கேட்டன
என்னவளைப் போலவே...

அதன் விளைவாய்ப் பிறந்த கற்பனையே இது.

No comments: