22/05/2020

சிநேகவல்லி




#நாவல் எல்லாம் படிப்பதற்கு
நமக்கெல்லாம் பொறுமை இல்லை
இல்லாத ஒன்று பற்றி
இப்படி ஏன் அளக்கிறார்கள்
என்றெல்லாம் எண்ணித்தான்
ஏனோ நான் தவிர்த்து வந்தேன்...


இராஜேஷ் குமார் நாவல் மட்டும்
இதில் ஏனோ விதிவிலக்காய்..
இரயில் பயணங்களில்
இரகசியக் காதலியாய்..

சிலபல நாவல்களை
தின்றன்று செரித்துள்ளேன்
கட்டுரையும் கவிதையும்
கட்டுக் கட்டாய் சுவாசித்தேன்..

கட்டுக்கதை நாவல்களாய்
கட்டம்போட்டு விலக்கி விட்டேன்..
தொட்டில் மீனைப் போல்
தொட்டிலே கடல் என்றேன்...


பட்டி ஆட்டைப்போல்
பட்டியே உலகென்றேன்...
சங்க இலக்கியம்போல்
சாமானிய இலக்கியமா?
மதியில் ஏற்றாமல்
மடையனாய் உளறிவந்தேன்..

சித்தம் கலங்கியவன்
பித்தம் தெளிந்ததுபோல்
பொன்னியின் செல்வனால்
கண்கள் திறந்து கண்டேன்..

கல்கியின் பாத்திரங்கள்
கல் மனதில் சிலையாக
கற்பனைச் சித்திரங்கள்
கவிப்பதைக் கண்டு கொண்டேன்..

கள்ளுண்ட தமிழன்போல்
சொல்லுண்ட தமிழாலே
அடுத்தடுத்த நாவலுக்கு
அடிமனம் ஆசையுற
#பாகைநாடன்_ஐயாவின்
படைப்பிலே மூழ்கி விட்டேன்..
(Shanmugam NV ஐயா)

"#சிநேகவல்லி" என
அவரிட்ட தலைப்பே
சினேக நதிபோல
சீண்டியது என்னை..
மீண்டும் ஆதித்தன்
இளங்கோவாய் மின்னுகிறான்

காதல் லீலையுடன்
ராஜாங்கம் செய்கின்றான்..
பாகம் ஒன்று முடிந்தபின்னும்
தேகம் மட்டும் சிலிர்க்கிறது...
ஆம்...
தேகம் இன்னும் துளிர்க்கிறது

✍️செ.இராசா

(எத்தனையோ விடயங்களைப் பதிவு செய்துள்ளீர்களே எப்படி ஐயா என்றேன்? 20 வருட உழைப்பு என்றார்.

காதல் காட்சிகளில் புகுந்து விளையாடி உள்ளீர்கள் என்றேன். சிரித்துக்கொண்டே.... நாங்கள் விளையாடிவிட்டோம் நீயும் விளையாடய்யா ஏன்றார்..... சிரித்துக்கொண்டே விடைபெற்றேன் பாகம்-2ஐத்தேடி....)

No comments: