03/05/2020

#பேர்_ஆசை




தந்தையும் தாயும்
தருவித்த பெயரை
தானாய் மாற்றுதல் சரியா?

பெரியோர் பெயரைப்
பெயரிட்டு அழைத்தல்
தமிழர் மரபில்
தவறென நினைந்தே
அடைமொழி இட்டே
அழைத்தார் அன்று!
அதுவே பெயராய்
ஆனதும் உண்டு!

ஆதியில் இன்றிப்
பாதியில் புகுந்த
சாதியின் பெயரால்
சூடிய பெயரை
பழைய மரபின்
பழக்கம் என்றே
இன்றைக்கும் கூட
இழுப்போர் உண்டு!

அறிவின் முதிர்ச்சியில்
அன்பின் நெகிழ்ச்சியில்
பற்றிய ஒன்றில்
தொற்றிட வேண்டி
இயற்பெயர் மாற்றி
புதுப்பெயர் சூடி
இசைந்தோர் புவியில்
எங்கிலும் உண்டு!

படைப்பின் மூலம்
படைப்புகள் தெரிய
படைத்தோன் மறைந்து
படைப்பைக் காட்ட
புனைப் பெயர் வைத்தும்
புனைந்து கொடுத்தோர்
புவியில் இங்கே
பலபேர் உண்டு!

பட்டப் பெயர்போல்
போட்டுக் கொண்டும்
சுவரொட்டி முழுதும்
சிரித்துக் கொண்டும்
தலதள பெயருடன்
தன்னைச் சேர்க்கும்
படித்த இளைஞர்ப்
படைகளும் உண்டு!

புனைந்த பெயரோ
புகழ்ந்த பெயரோ
சுட்ட பெயரோ
சுட்டுப் பெயரோ
வந்த பெயரோ
வைத்த பெயரோ
பிறந்து மறையும்
பிண்டம் தெரிய
பேர்-ஆசைத் தவறா என்றால்
பேராசைத் தவறே என்பேன்!

✍️செ. இராசா

(யாரையும் குறிப்பிட்டு அல்ல. மனதில் பலநாளாய் எனக்குள் கேட்ட கேள்விகளுக்கான விடையாகவே இவ்வரிகள்)

No comments: