14/05/2020

சூனியம்



இல்லாத ஒன்றை
இல்லை என்று சொல்லும்
இந்த வார்த்தைக்குள் தான்
எத்தனை அர்த்தங்கள்...

கணித மொழியில்
சூனியம் என்றால் பூஜ்யம்

பூஜ்யத்திற்கு மதிப்புண்டா என்றால்
இல்லை என்போம்
பூஜ்யமின்றி கணிதமுண்டா என்றால்
இல்லை என்போம்

எனில் இல்லாத ஒன்றிற்கு
இருப்பு எதற்கு?!
இருப்பதால் தானே
இல்லை என்கின்றார்

எனில்
நாத்திக வாதம்தான்
சூனிய வாதமா?!

ஆனால்
ஆத்திக வாதமும்
அதைத்தானே சொல்கிறது

இதோ
முன்னால் நாத்திகரும்
பின்னால் ஆத்திகருமான
கவியரசரைக் கேட்போம்;

"பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்"

இது
பௌத்தம் சொல்லும்
மாயா வாதம்போல் உள்ளதே...
ஆம்
அதுவும் சூனிய வாதம் தானே?!

ஆன்மீக வாதம் விடுங்கள்
அறிவியல் வாதம் கேளுங்கள்

பிக் பேங்க் தியரி சொல்லும்
பிரபஞ்சக் கோட்பாட்டில்
பெரிய வெடியொன்று
திடீர் என்று வெடித்ததாமே?!

ஆமாம்..
இந்தத் "திடீர்" என்பதன்
மூலப்பொருள் எங்கே?
இல்லாத ஒன்றா வெடிக்கும்?
முன்பே இருந்தது என்றால்
முன்பே வந்தது எப்படி?

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்
இங்கே எல்லாம் வெறும் சூனியமே
இந்த சூனிய ஞானம் புரியாவிடில்....
மன்னியுங்கள்..
இங்கே எல்லாம் ஞான சூனியமே

No comments: