28/12/2019

தகதக தகதிமி நடராஜா


நம்ம ஊரு பசங்களுடன் சேர்ந்து ஒரு சிவன் பாடல் தொடங்கினோம். அந்தப் பாடல் இப்போதுதான் முடியும் நிலையில் உள்ளது. அதில் மேலும் சில வரிகள் உடனடியாக வேண்டுமென்று ஒரு இக்கட்டான நேரத்தில் கேட்டார்கள். இறைவனுடைய அருளால் உடனேயே எழுதி அனுப்பிவிட்டேன். அப்பாடல் கீழே உள்ளது உறவுகளே. அதில் கடைசி இரண்டு பத்திகள் தற்போது சேர்த்தது.

இதோ உங்கள் பார்வைக்கு...

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தகதக தகதிமி தகதக தகதிமி
தகதக தகதிமி நடராஜா
தரிகிட தகதிமி நடராஜா (1x2)

தில்லையின் கூத்தனே நடராஜா- நீ
எல்லையில் லாதவன் நடராஜா
அணுவிலே அசைந்திடும் நடராஜா-நீ
அனைத்திலும் ஆடிடும் நடராஜா

இசைக்கின்ற இசையின்
இசையிலே இசைந்து
அசைவது மட்டுமா நடனம்?- இல்லை
இசைக்கா இசையிலும்
இசையினை இசைக்கிற
அசைவுள்ள ஆட்ட(மே)மும் நடனம்!

தாம்தூம் தாளத்தில்
தகதிமி ஜதியினில்
ஆடுதல் மட்டுமா நடனம்?- இல்லை
அடிக்கிற பறையினில்
இடிக்கிற இசையினில்
துடிக்கிற துள்ள(ளே)ளும் நடனம்!

நாயண மேளத்தில்
நாட்டிய சபையினில்
காட்டுதல் மட்டுமா நடனம்?- இல்லை
நாட்டினை விட்டவர்
காட்டினைத் தேடையில்
காட்டிடும் ஆட்ட(மே)மும் நடனம்!

#மார்கழி மாதத்தில்
கானக சபையினில்
ஆடுதல் மட்டுமா நடனம்- இல்லை
#ஆடியில் ஆடிடும்
ஆலயம் கூடிடும்
ஆனந்த ஆட்டமும் நடனம்!

#ஜிகுஜிகு உடையினில்
விறுவிறு நடையினில்
அடிக்கிற கூத்தா நடனம்- இல்லை
#கிண்கிணி ஓசையில்
பொங்கிடும் ஆசையில்
வந்திடும் ஆட்டமே நடனம்!

தில்லையின் கூத்தனே நடராஜா- நீ
எல்லையில் லாதவன் நடராஜா
அணுவிலே அசைந்திடும் நடராஜா-நீ
அனைத்திலும் ஆடிடும் நடராஜா

✍️செ. இராசா

No comments: