14/12/2019

வரலாறு


எது வரலாறு?

எதைச் சொல்லவேண்டும்
எதைச் சொல்லக் கூடாதெனத்
தீர்மானிப்பதா வரலாறு?
எது எப்படியோ
அதை அப்படியே
மொழிவதுதானே வரலாறு?

கட்டபொம்மு நாயக்கரை
எட்டப்ப நாயக்கர்தான்
காட்டிக் கொடுத்தாரெனக்
கதைப்பது மட்டுமா வரலாறு?!
இருவரும் யாரென்று
தெளிவோடு மொழிவதுதானே வரலாறு!

கஜினி முகமதுவும்
கோரி முகமதுவும்
எப்படி வென்றார்களென
படிப்பது மட்டுமா வரலாறு?
ராஜ ராஜச் சோழனும்
ராஜேந்திரச் சோழனும்
எங்ஙனம் வென்றார்களென
எல்லோரும் படிப்பது(ம்)தானே வரலாறு?!

ஆரியம் திராவிடமென
அள்ளியள்ளி விடுவோர்
அளப்பது மட்டுமா வரலாறு?
எழுச்சியோ வீழ்ச்சியோ
உண்மையில் நடந்ததை
உரைப்பது(ம்)தானே வரலாறு?

எதையும்
திரித்துத் திணிப்பதல்ல வரலாறு!
இருந்ததை
இருந்தபடிச் சொல்வதே வரலாறு!
சரி தவறல்ல வரலாறு!
உள்ளதை உரைப்பதே வரலாறு!

கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்
மறை(ந்)த்த வரலாறு!
வந்து கொண்டு இருக்கிறது..

கீழடி நாகரிகமாய்...

✍️செ. இராசா

No comments: