13/11/2019

அனுபவம்


“அனுபவம் இருக்கா?!”

இந்தக் கேள்விதான்
எத்தனை அபத்தமானது!!

படிப்பை முடித்தவுடன்
படியேறிப் படியேறி
அலைந்து களைத்த
அனைவரும் அறிவார்கள்!

அந்தக் கேள்வியால் வரும்
அழுத்த அனுபவத்தை!
அனுபவம் முக்கியம்தான்

ஆனால்,

நீச்சல் பயிலும் முன்;
நீந்திய அனுபவம் கேட்போமா?- இல்லை
சம்சாரி ஆகும் முன்
சமாச்சார அனுபவம் கேட்போமா?!

உறிஞ்சிக் குடிப்பது என்பது
பிறந்த பிஞ்சுக்குள்
பொதிந்த அனுபவம்!

இப்படித்தான் நடக்கும் என்பது
எப்போதோ விதைத்த
ஊழ்வினை அனுபவம்!

நெருப்பு சுடும் என்பது
நெருப்பால் கிட்டிய
முதல் அனுபவம்!

நெருப்பால் சுட்டு உண்டது
நெருப்பால் விளைந்த
கற்கால அனுபவம்!

வெப்ப ஆற்றலை வேறு ஆற்றலாக்கியது
விஞ்ஞானத்தால் விளைந்த
தற்கால அனுபவம்!

ஒளிந்த சக்தியை உணர்ந்து சொன்னது
மெய்ஞானத்தால் உதிர்ந்த
மெய்யியல் அனுபவம்!

அழுத்த சக்தியை வெடிக்க வைத்தது
விளைவை அறியாமல் வந்த
விபரீத அனுபவம்!

அறிந்த அறிவை வைத்து
அனுபவ அறிவைப் பெறுவதும்;
அடைந்த அனுபவத்தை வைத்து
அறிவின் இலக்கை விரிப்பதும்
ஒரு சக்கர சுழற்சியே...

இங்கே..
அனுபவம் இல்லையென
அறிவாளிகளை ஒதுக்காதீர்!
அதே சமயத்தில்
அறிவாளிகள் கிடைத்துவிட்டால்
அனுபவஸ்தரை விலக்காதீர்!
அறிவு அனுபவமாகட்டும்!
அனுபவம் படிகளாகட்டும்!

✍️செ. இராசா

(இந்தப் படம் என் செர்பிய நண்பர் ஆங்கிலத்தில் அனுப்பி இருந்தார்....படித்தவுடன் பயங்கரமாக சிரித்தேன். உலகம்பூரா... அப்படித்தான்போல😀😀😀😀😀)

No comments: