10/11/2019

வெளிநாட்டுக் கணவரின் பிரிவு பாடல்


உசுரு விட்ட உடலுபோல
உன்னை விட்டு உழலுறேன்
என்ன சொல்லி என்ன ஆக..
என்னைநானே நோகுறேன்..

எண்ணையில்லா விளக்குபோல
எண்ணத் திரிய எரிக்கிறேன்...
கண்ணுக்குள்ள உன்னை வச்சு
கண்ணீராலே நனைக்கிறேன்..

அடியே அடியே... அடியே அடியே..
அடிமேல் அடியே..வாழ்க்கை இடியே..
கொடியே கொடியே...கொடுமை கொடியே!
கொழுத்தும் வெயில்போல்...கொடுமை கொடியே!

சரணம்-1

உந்தன் பார்வையில
மின்னல் வேகத்தில
மின்சாரம் பாஞ்சதுலதானே- நான்
சம்சாரியாக இன்று ஆனேன்!!

என்ன செய்யலான்னு
நினைக்கும் முன்னாலே
மூனு தேவதையைப் பெத்தேன்- இப்ப
மூச்சு முட்டித்தான் நிக்கேன்!

காசு பத்தாமல்
கடனை வாங்கியதில்
எல்லாமே மூழ்கியதால்தானே- நான்
இங்கேயே வந்தேனடி மானே!

சரணம்- 2

கொஞ்சம் காசெடுக்க
நெஞ்சப் பிடிச்சுக்கிட்டு
நாயாக உழைக்கிறேன்டி இங்கே- நீங்க
நன்றாக வாழணுமே அங்கே...

இந்தா வந்துடுறேன்னு
இப்பத்தான் சொன்னதுபோல்
இன்னும் தோனுதடி எனக்கு- ஆனால்
இன்னும் போகுதடி கணக்கு!

ஜெயிலுக்குப் போனவுக
பெயிலிலே வர்ரதுபோல்
என்னாடி நம்மோட வாழ்வு- அடி
என்னைக்கு கிட்டுமோ தீர்வு?!!

✍️செ. இராசா

No comments: