13/11/2019

#தீக்குச்சி



ஹைக்கூ
*********
உரசும் போதெல்லாம்
உயிரே போகிறது
தீக்குச்சிக்கு..

புதுக்கவிதை
************
விரல்கள் இரண்டாலும்
வேகமாய்ப் பற்றி;
இன்னும் சற்று வேகமாய்
மேனியை உரசி;
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு கணமும்
இன்னும்...இன்னுமென
இப்படியே....
எரிக்கத்தான் படைத்தீரோ?!

#தீக்குச்சியின் கேள்விகள்

தீக்குச்சி- வெண்பா
********************
சிரத்தில் இருக்கும் சிறிய கனமும்
உரசும் கணத்தில் உயிரை- எரிக்கும்
அளவில் குறைந்த அசுத்த குணமும்
உளத்தைக் கெடுக்கும் உணர்!

தீக்குச்சி- சந்தக்கவிதை
************************
பிறந்தவீடு விட்டுவந்து
புகுந்தவீடு வந்ததுமே
மருமகள்கள் ஏற்றுமொரு பெட்டி- அதுத்
திருமகள்கள் பற்றவைக்கும் தீப்பெட்டி!

சமையலறைப் போனாலும்
சாமியறைப் போனாலும்
எப்போதும் தேவையொரு பெட்டி- அது
லைட்டராக மாறியுள்ளத் தீப்பெட்டி!

வெண்சுருட்டை எரிச்சாலும்
நம்முடம்பை எரிச்சாலும்
அப்போதும் தேவையொரு பெட்டி- அது
எப்போதும் தேவையானத் தீப்பெட்டி!

நவீனக் கவிதை
***************
தலையில் ஏற்றிய காரணத்தால்
தன்னுயிரை மாய்க்க்கும்
ஒவ்வொரு தருணங்களும்
எதையோ ஒன்றை உணர்த்தினாலும்
மீண்டும் மாய்வதற்குத்
தயாராகிக் கொண்டுதான் இருக்கின்றன
இந்தத் தீக்குச்சிகள்

✍️செ. இராசா

(நாங்களும் உரசுவோம்ல...நான் தீக்குச்சியச் சொன்னேன்...😀😀😀)

No comments: