31/05/2019

பொய்



உண்மையைத் திரிப்பது பொய்
உள்ளதை மறைப்பது பொய்
கற்பனையில் கதைப்பது பொய்
சொற்களில் வதைப்பது பொய்

இங்கே
சில பொய்கள் நல்லது
சில பொய்கள் கெட்டது

சில பொய்கள் தேவை
சில பொய்கள் போதை

ஆம்..
வராத நிலவை
வா..வா..என்று அழைத்து
அம்மா ஊட்டிய
அன்பைப்போல்

காணாத ஒன்றை
கடவுள் என்று காண்பித்து
அப்பா காட்டிய
அறநெறிபோல்

நன்றாகப் படித்தால்
நாட்டையே ஆளலாம் என்று
ஆசிரியர் தூண்டிய
ஆர்வத்தைப்போல்

சில பொய்கள்
சிந்தைப் பயிர் வளர்க்கும்
இயற்கை உரங்கள்- அவை
பக்க விளைவு இல்லா
பயன்பாட்டு மந்திரங்கள்

சில பொய்கள்
நிலத்தையே தரிசாக்கும்
இரசாயண உரங்கள்- அவை
பக்கா விளைவு தந்து
பதராக்கும் சொற் கொல்லிகள்

தாம்பத்ய பாலத்தை
தகர்த்துவிடும் வெடிகுண்டுகள்
பொய்கள்

நட்பின் வேர்களை
நசுக்கிவிடும் நச்சுக்கொல்லிகள்
பொய்கள்

உறவின் முகங்களை
உருக்குலைக்கும் திராவகங்கள்
பொய்கள்

அரசியல் வாதிகளின்
அடையாளக் கருவூலங்கள்
பொய்கள்

பகுத்தறியா கூட்டத்தின்
பச்சைய செறீவூட்டங்கள்
பொய்கள்

அயோக்கியக் காமுகரின்
ஆதார் அடையாளங்கள்
பொய்கள்

இங்கே..
அரிச்சந்திர வாழ்வு
அசாத்தியம்தான்...

ஆனால்..
வள்ளுவரின் வாய்மை
வாய்ப்புள்ளதுதானே..

தெரியாத பாடலைத்
தெரியுமென்று சொன்ன
கவியரசரின் கன்னிப் பொய்
புவியைப் புரட்டிப் போட்டதே..

பிறந்த குழந்தையைத்
தெரியாதென்றே சொன்ன
கலைஞரின் கன்னிப் பொய்
தமிழிசைக்கு வேட்டு வைத்ததே

என்ன உளறுகிறாய்?!
பொய்யை நியாயப்படுத்தாதே
மெய்யே சரி..

எனில்
இருந்த முகிலனைத் தேடுங்கள்
இல்லாத நேசமணியை விட்டு விடுங்கள்...

✍️செ. இராசா

tagTag PhotopinAdd Location

No comments: