27/05/2019

தீ


அழுத்தக் காற்றில்
அவதரித்த குழந்தை நீ

பஞ்ச பூதத்தில்
பரிணமித்த தத்துவம் நீ

உயிர்களை
உயிர்ப்பிக்கும் உஷ்ணம் நீ

பசியினைப்
பற்ற வைக்கும் தணல் நீ

புசித்ததை
மசியவைக்கும் கனல் நீ

மசிந்ததை
குருதியாக்கும் வெப்பம் நீ

இங்கே..
நீ இல்லாமல் எதுவுமில்லை...

ஆம்..
அணு அடுப்புகள்
அனைத்தும் எரித்த நெருப்புதானே
சூரியக் குடும்பங்கள்

சூரியக் குடும்பங்கள்
சேர்த்த குடியிருப்புதானே
இந்த பால்வீதி?!

பால்வீதியில் மிதக்கும்
தீப் பந்தங்கள் தானே
இந்தப் பிரபஞ்சம்?!

புவியின் மேனியை
பருதியின் கரங்கள்
பற்றாது போகுமானால்
மழை மேகம்
மசக்கை கொள்ளுமா?!
இல்லை
நீர்க் குழந்தை
நிலம் பார்க்குமா?!

நீரின்றி அமையாதாம் உலகு
தீயே..
நீரின்றி அமையுமா உலகு?!

ஆயினும்...
ஒரு சந்தேகம்

முக்கண்ணாய் இருந்து
முக்தி தரும் நீ
ஏழையின் குடிசையை
எரிப்பது ஏன்?!

அன்னை சீதையை
அரவணைத்த நீ
அணுவின் உலையாகி
ஆபத்தாவது ஏன்?!

பாஞ்சாலி தேவியை
பிரசவித்த நீ
சமத்துவ நீதியை
பிரசவிக்காதது ஏன்?

இங்கே

இன்னும்
அதிகாரத் தீ
அடங்கவில்லையே?

இன்னும்
சாதியத் தீ
சாகவில்லையே?

தீயே
பொறுத்தது போதும்
போகித் தீ மூட்டு

பொறுத்தது போதும்
போதித்து காட்டு

✍️செ. இராசா

பிற்சேர்க்கை:

காணொளிக்கு

https://www.facebook.com/1529793087155445/posts/1552844551516965?s=100000445910230&v=e&sfns=mo

No comments: