28/09/2018

சிலை


சிற்பியின் சிந்தைக்குள் புகுந்து
கற்பனைக் கவிதையாய் நுழைந்து
அற்புதக் கரங்களில் பிறப்பது சிலை..

ஓவியக்கலையில் உடலாகி
சிற்பக்கலையில் உயிராகி
சித்திரக்கலையாய் உருவாவது சிலை...

இங்கே...

கடவுளுக்கும் சிலை
கற்பனைக்கும் சிலை

இருப்பவருக்கும் சிலை
இல்லாதவருக்கும் சிலை

தலைவனுக்கும் சிலை
தண்டங்களுக்கும் சிலை

கண்ணகிக்கும் சிலை
கண்டவனுக்கும் சிலை

தமிழ்த்தாய்க்கும் சிலை
தருதலைகளுக்கும் சிலை

அரசியல் நடிகர்கருக்கும் சிலை
நடிக அரசியலார்க்கும் சிலை

இவ்வளவு ஏன்?

சிலையை எதிர்த்த
புத்தருக்கும் சிலை
பெரியாருக்கும் சிலை

தேவையா சிலை என்றால்
தேவை தான் என்பேன்

இல்லையெனில்....
சித்தரில் சித்தனாம்
சிந்தனை சிற்பியாம்
வள்ளுவனின் சிலை இல்லாது
வங்கக்கடல் வாடி இருக்குமே....

தேவையா சிலை என்றால்
தேவையில்லையென்றும் சொல்வேன்

ஏனெனில்...
சரித்திரத் தலைவர்களை எல்லாம்
சாதியத் தலைவர்களாய் மாற்றி
கம்பியிட்டு காவல்காக்கும்
கொடுமையையும் காண்கிறோமே...

யார் கேட்டார்கள்?!
மூலைக்கு மூலை சிலை

யார் கேட்டார்கள்?!
மூளைக்குள் போகாதோர் சிலை

வையுங்கள் சிலை
எப்படி வாழ வேண்டுமென்பதற்காக

வைக்காதீர் சிலை
எப்படி வாழ வேண்டாமென்பதற்காக

இந்துக்களின் சிலை
தத்துவத்தின் அடையாளம்

இயேசுவின் சிலை
அன்பின் அடையாளம்

புத்தரின் சிலை
கருணையின் அடையாளம்

ஆனால்...
திருவள்ளவரின் சிலை
தமிழர்களின் மொத்த அடையாளம்

வையுங்கள் சிலை
..............வள்ளுவனுக்கு மட்டும்

✍️செ. இராசா

No comments: