26/09/2018

#அறிவியலும்_தமிழும்_1



#அறிவியலும்_தமிழும்_1
********************
அனைத்து அறிவியல் சார்ந்த கருத்துகளும் ஆங்கிலேயர்கள் சொன்னதாகவே நினைத்துக்கொண்டிருக்கும் உறவுகளுக்காகவும், தமிழில் உள்ள அறிவியல் விடயங்களை அறிந்து கொள்ள நினைக்கும் ஆர்வலர்களுக்காகவும் எனக்குத் தெரிந்த சில விடயங்களைப் பதிவிடலாமே என்று எண்ணியதன் விளைவாகவே இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன். பிழை இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டலாம்.

நாம் சில சமய இலக்கியங்களை மத ரீதியாக மட்டுமே அணுகாமல் அறிவியல் ரீதியாகவும் அணுகினால், கண்டிப்பாக பல விடயங்களை நம்மால் வெளியில்கொண்டு வர முடியும் என்பது என் திண்ணம்.

அண்டத்தின் தோற்றம்
**********************
அணுவைப்பற்றியும், கோள்களைப்பற்றியுமான தெளிவு ஆங்கிலேயர்களுக்கு வருவதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே நம் தமிழர்களுக்கு வந்துவிட்டது நண்பர்களே. கடந்த நூற்றாண்டில்தான் பெருவெடிப்புக் கொள்கையே (Bigbang theory) வருகிறது. ஆனால், நம் தமிழ்ப்பாடல்கள் அதற்கு முன்பாகவே அனைத்தையும் பதிவு செய்து வைத்துள்ளன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா?!!

நாம் வாழும் பூமி ஒரு சூரிய குடும்பத்தில் உள்ளது, ஒரு சூரிய குடும்பம் என்பது ஒரு சூரியனை மையமாகச் சுற்றிவரும் பல கோள்களையும் பல துணைக்கோள்களையும் கொண்ட ஒரு குடும்பம். இப்படி எத்தனையோ சூரிய குடும்பங்கள் சேர்ந்த ஒரு அமைப்பே பால்வீதி (கேலக்ஸி) எனப்படும். இப்படி எத்தனையோ பால்வீதிகள் சுற்றிவரும் அமைப்பே அண்டம் எனப்படும். இப்படி எத்தனையோ கோள்கள் சுற்றிவரும் அமைப்பே நம் பேரண்டம் என்று, தற்போதுதான் (போன நூற்றாண்டில்தான்) அறிக்கை வெளியிடுகிறார்கள்.

ஆனால், 9ஆம் நூற்றாண்டில் வந்த மாணிக்கவாசகர் எழுதிய கீழ்வரும் திருவாசகப் பாடலைப் பாருங்களேன்.
நீங்களே அறிந்து கொள்வீர்கள் தமிழனின் விஞ்ஞானம் பற்றிய மெய்ஞானத்தை.

இதோ பாடல்
**************
அண்டப் பகுதியின் உண்டைப் பெருக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துண்ணனுப் புரைய..

விளக்கம்:
**********
அண்டத்தில் அடங்கியுள்ள அழகான மிகப்பெருங் காட்சியின் ஒவ்வொன்றாக அதன் அழகு பற்றிச் சொல்வதானால் 101 கோடிக்கும் மேலாக விரியும். எப்படியென்றால், மேற்கூரையில் இருக்கும் சிறிய துளையின் வழியாக வீட்டுக்குள் புகும் சூரியக்கதிரில் காணப்படும் நெருங்கிய துகள்களைப்போல் இருக்கும்.

இதைவிட எப்படிச் சொல்ல முடியும் உறவுகளே?!?

அடுத்து அண்டத்தின் ஆதாரமான அணுவைப்பற்றி பார்ப்போம்.

(தொடரும்)

No comments: