05/09/2018

ஆடுமாடு சூத்திரமே.......ஆசிரியர்தின வாழ்த்துகள்



ல்லில் சிலைவார்க்கும்
கலைமிகு சிற்பியைப்போல்;
எண்ணத் தூரிகையில்
வண்ணமிடும் கவிஞனைப்போல்
மண்ணைப் பதமாக்கும்
மாண்புமிகு விவசாயிபோல்;

என்னையும் ஏற்றிவிட்ட
எண்ணில்லா ஆசிரியர்கள்
எண்ணம் முழுவதுமே
என்றென்றும் இருந்தாலும்
அதிலே சிலர்பற்றி
அன்போடு எழுதுகின்றேன்!

ஒன்றாம் வகுப்பு முதல்
ஐந்தாம் வகுப்பு வரை
அம்மாவின் ஆசிரியரே
அடியேனின் ஆசிரியர்
இராசாவின் அடித்தளமே
இராணி டீச்சர் என்று சொல்வேன்!

ஆறாம் வகுப்பொன்றில்
ஆமைபோல் இருந்தவனை
மேடையில் ஏற்றிவிட்டார்
மேதகு ஆசிரியர்...
மாணிக்கம் அவர் பெயர்

“வானாகி மண்ணாகி......
வளியாகி.........வளியாகி...
வாய்க்குள் அன்றெனக்கு
வார்த்தைகள் வரவில்லை...
கண்கள் கலங்கியது..
கால்கள் நடுங்கியது...

உடனே ஒரு குரல்
சடக்கென்று வந்ததன்று...
“பதறாதே மாணிக்கம்
பதறாதே” என்று சொல்லி
மனிதர் யாவரையும்
மாடாய் நினைக்கச்சொல்லி
மாணிக்க வாத்தியார்
மனபயம் போக்கி வைத்தார்....
மாணிக்க வாசகரும்
மனதில் ஓடி வந்தார்....
மாணிக்க வரிகளினால்- இந்த
மாணிக்கத்தின் மானம் காத்தார்!

அன்று முதல் இன்றுவரை
எங்குநான் சென்றாலும்
ஏறுகின்ற மேடைகளில்
எப்போதும் வருவதெல்லாம்
ஆசிரியர் சொல்லித்தந்த
ஆடுமாடு சூத்திரமே....

பத்தோடு பதினொன்றாய்
அத்தோடு நானொன்றாய்
படிப்பில் தேறாது
பதராய் இருந்தவனை
பத்தாம் வகுப்புதனில்
முதல்நிலை ஆகவைத்த
நல்லமுத்து ஆசிரியர்
நல்ல தலைமை ஆசிரியர்!

இன்னும் இன்னும்
என்னுள்ளே எத்தனையோ ஆசிரியர்கள்
அனைவருக்கும் சொல்லுகிறேன்
ஆசிரியர்தின வாழ்த்துகள்...

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

No comments: