21/02/2022

வார்த்தைகளில் என்ன இருக்கிறது



வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்பவரா நீங்கள்? எனில் உங்களுக்கான பதிவுதான் இது.

விளைநிலத்தின் பெருமையை முளைவிடும் பயிர் காட்டும். நம் குலத்தின் பெருமையை பேசுகின்ற வாய்ச்சொல் காட்டிவிடும் என்கின்ற வள்ளுவனார் குறள் பாருங்களேன்.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்
-----குறள்- 959.

நன்றாக யோசித்துப்பாருங்கள். கோபத்தின் உச்சத்தில் சில பேர்களின் வாயில் அதிகபட்சமாக வரும் கெட்ட வார்த்தைகள் எருமை, நாய்...என்று மிருங்களின் பேர்கள்தான். ஆனால் அதுவே சிலருக்கோ, சாதாரணமாகவே குழந்தைகளைக் கொஞ்சும்போது கூட சனியனே, பிசாசே, கொன்றுவேன்....என்று கொட்டும் பாருங்கள்....அப்பப்பா..காதில் கூவம் வந்து பாயும்.

செட்டிநாட்டுப் பக்கம் கவனித்தீர்களேயானால் "#அரசாளுவான்" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். அதை உள்நோக்கி கவனித்தால் "அரசை ஆள்பவனே" என்கின்ற அர்த்தமாக இருக்கும். ஆமாம் இந்த வார்த்தை எப்படி திட்டுவதாகும். உண்மைதான், இங்கே வருகின்ற வார்த்தைகளில் சப்தம்தான் கோபத்தின் வெளிப்பாடே தவிர மறந்தும் அவச்சொல்கள் வந்துவிடக் கூடாது என்கின்ற பொறுப்புணர்ச்சியே மிகுந்து காணப்படும்.

இப்படி ஒவ்வொரு வார்த்தைகளையும் சற்றே உள்நோக்கியபோது, இந்த ராஸ்கோல் என்கின்ற வார்த்தையின் பொருள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம்.. அது ஆங்கிலத்தில் புட்டத்தைக் குறிக்கும் வார்த்தையான #ஆஸ்ஹோல் என்பதன் மருவுச் சொல்லே. அடடா......இப்படி நம்மோடு கலந்த பல வார்த்தைகள் நம்மை நம் கலாச்சாரத்தையே மாற்ற முயல்கின்றன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

#பாளையத்துக்காரர்கள் (பாளையம்- படையினர் தங்கும் பாசறை) என்ற ஒரு சொல்லைச் சொல்லியே தெலுங்கர்கள் நம்மை ஆண்ட வரலாற்றை வீரபாண்டிய கட்டபொம்முலு கதையிலும் மறைத்தார்களே அது ஏன்? #தமிழர் என்கின்ற சொல்லிருக்க இன்னும் #திராவிடர் என்று சொல்வது ஏன்? மத்திய அரசு என்கின்ற சொல்லிருக்க அது ஒன்றிய அரசாக மாறியது ஏன்? இப்படி அரசியலில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும் அன்றாட வாழ்க்கையிலும்கூட அதே நிலைதான்.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157) மறந்து விடாதீர்.

எனில் என்ன செய்யலாம்? ம்ம்...வாங்க வழிக்கு...அரசியல் சொல்லாடல்களை நாம் அப்படி எளிதாய் மாற்றிவிட முடியாதுதான். ஆனால் குறைந்தபட்சம் புரிந்து கொள்ளலாம். அதேவேளையில் நாம் எழுதும் அல்லது பேசும் சொற்களில் அறச்சொல்லோ அவச்சொல்லோ வராமல் பேச முயற்சிக்கலாமே .ஆமாம், எங்கே தொடங்குவது? நம்மில் இருந்துதான். நம் குடும்பத்தில் இருந்துதான்....வாங்க மாறுவோம்...மாற்றுவோம்!!!

செ. இராசா

No comments: