13/02/2022

குறளுரையாடல்---அந்தாதி----கரு பொது



#நான்_1
முயலைப் பிடிக்கவா முக்கினேன்; இல்லை
உயர்ந்த களிறே இலக்கு

#ஐயா_2
இலக்குக ளென்றும் இமயமாய்க் காண்பாய்
உலகையே வெல்வாய் உணர்

#நான்_3
உணர்ந்தேன் கவியே உளத்தில் தினமும்
மணக்கும் தமிழென் மனம்

#ஐயா_4
மனத்தில் புகுந்து மகுடி இசைத்தீர்
இனிப்பே எனக்குள் இருப்பு.

#நான்_5
இருப்பின் எழிலாய் எழுமுன் விருத்தம்
விரும்பிப் புசிக்கும் விருந்து

#ஐயா_6
விருந்தாய் நிதமும் வியன்தமிழ் யாத்தீர்
விரும்பிச் சுவைத்தேன் வியப்பு

#நான்_7
வியந்தேன் மிரண்டேன் விருத்தக் கவியே
நயம்தேன் தினம்தினம் நல்கு

#ஐயா_8
நல்குவீர் நாள்தொறும் நற்றமிழ்ச் செய்யுளின்
தொல்தமிழ் பாக்கள் தேன்.
#நான்_9
தேனெனத் தித்திக்கும் செந்தமிழின் பாக்களெல்லாம்
வானென நிற்பதே மாண்பு

#ஐயா_10
மாண்புடைப் பாக்களின் மன்னவன் ஆனீர்
நோன்புடன் நூற்பீர் நிதம்.

#நான்_11
நிதம்நிதம் இத்தனை நேர்த்தியாய்ச் செய்யும்
விதந்தரும் கோடி விருது

#ஐயா_12
விருதுனைத் தேடி விருந்துண்ண வைக்கும்
கரும்பதன் சாறாய்க் குடி.

#நான்_13
குடிக்கா எமக்கும் கொடுக்கின்றீர் போதை
படித்தவுடன் சொக்கினோம் பார்

#ஐயா_14
பார்த்தனின் வில்லெனப் பாயுமுன் பைந்தமிழ்
போர்த்துவேன் பொன்போல் புகழ்

#நான்_15
புகழேந்தி பெற்றப் புகழினைப் போலே
புகழ்-ஏந்தத் தூவுகிறேன் பூ

#ஐயா_16
பூக்களைக் கொண்டு பொலிமலர்க் காவில்
பாக்களை யாத்தீர் பதம்.

#நான்_17
பதமான சொல்லெடுத்துப் பாடுகின்ற பாக்கள்
இதயத்துள் பாயும் இனிது

#ஐயா_18
இனிதென்ப தீதல் இசையே உலகில்
மனதுள்ளும் மார்க்கம் மகிழ்வு

#நான்_19
மகிழ்வுடன் செய்யும் மகத்தான செய்கை
அகிலத்தில் காட்டிடும் அன்பு

#ஐயா_20
அன்பெனும் ஆயுதம் எல்லோர்க்கும் வாய்த்திடும்
முன்னேறிச் செல்ல முயல்.

✍️கவிஞர் அசோகன் சுப்பிரமணியன் விராலிமலை அவர்களுடன் அடியேன்

No comments: