19/07/2018

கடவுள் யார்



கடவுள் யார் என்றக்கேள்விக்கு
கவிதை படைத்திட வேண்டுமென்று
உடன் பிறக்கா உறவொன்று
உடனே தரும்படி வேண்டியதால்
எனக்குள் இருக்கும் சிந்தனையை
எளிதாய் எழுதிட முயலுகின்றேன்!
............................................

யார் கடவுள்? கேள்வியினை
எது கடவுள்? என மாற்றி
உந்தன் கேள்வியின் விடைதேடி
உன்னுள் நீயே உட்கடந்து
உள்ளத்தின் அடியினில் சென்றாலே
உன்னுள் கடவுளைக் கண்டிடலாம்!

அகிலத்தில் உள்ள அத்தனையும்
அணுவின் சேர்க்கை என்றறிந்தால்
மண்ணும் மரமும் மனிதர்களும்
விண்ணும் பொன்னும் கற்சிலையும்
ஆனதன் அறிவியல் புரிந்துவிடும்!
ஆண்டவன் அற்புதம் விளங்கிவிடும்!

உண்மைப் பொருளை அறிவதற்கு
உன்னதப் பாதை காட்டிடவே
உலகில் மதங்கள் வந்தாலும்
மதங்களின் அர்த்தம் தெரியாமல்- தன்
மதமே உயர்வென நினைப்போரால்
மண்ணில் பூசல்கள் நடக்கிறது!

ஆன்மா மீகம்(உயர்வு) அடைகின்ற
ஆன்மீகப் பொருளை நன்குணர்ந்து
அறத்துடன் பொருளை சேர்க்கின்ற
அறநெறி வாழ்வைக் கற்றுணர்ந்து
அகிலத்தை அன்புடன் நேசித்தால்
அதுவே கடவுள் என்றுணர்வாய்!

✍️செ. இராசா

தலைப்பு: Muthu தம்பி
— with Muthu.

No comments: