02/07/2018

முகநூலும் முழுவாழ்க்கையும் ஒப்பீடு


முழு வாழ்க்கை மாயையினை
முகநூலில் கண்டிடலாம்..
அகவாழ்க்கை புறவாழ்க்கை
அனைத்தையுமே கற்றிடலாம்...

அனைவருக்கும் தனியான
அடையாளம் இங்குண்டு...
அசலுக்கும் நகலுக்கும்
அரங்கேற்ற இடமுண்டு

அடியெடுத்து வைத்தவுடன்
அறிந்தவரே பழகிடுவர்..
அடுத்தடுத்து மற்றவரும்
அறிய அறிய இணைந்திடுவர்

இவரென் நண்பரென்று
இறுமாப்பு கொண்டிருந்தால்
பத்தோடு பதினொன்றாய்
அத்தோடு நமை வைப்பர்

இவருமா நண்பரென்று
இதழோரம் புன்னகைத்தால்
அன்பாலே பலநேரம்
ஆச்சரியம் தந்திடுவர்...

பெண்ணியம் பேசிக்கொண்டே
கன்னியையும் வர்ணிப்பர்..
சமயத்தை சாடிக்கொண்டே
சமயம்பாத்து கழுத்தறுப்பர்...

அறிவுரையும் தத்துவமும்
அள்ளி அள்ளி வீசிடுவர்...
அறிவாளி பட்டமெல்லாம்
அவருக்கே சூட்டிடுவர்...

அரசியல் நிகழ்வுகளில்
அனைவரும் கொந்தளிப்பர்...
அடுத்தடுத்த நிகழ்வுகளில்
அனைத்தையும் மறந்திடுவர்...

ஒத்த கருத்துடையோர்
ஒன்றாக இணைந்திடுவர்..
வேற்று கருத்தென்றால்
வேறு குழு சென்றிடுவர்...

விருதுகள் விற்குமிடம்
விருப்போடு சென்றிடுவர்..
விற்பனை தீருமெனில்
வெறுப்போடு விலகிடுவர்..

மழையே பொழிந்தாலும்
மறைவாக சிலரிருப்பர்...
இடியே இடித்தாலும்
இமைமூடி சிரித்திடுவர்..

அடுத்தவர் வளர்ச்சியினை
அமைதியாகப் பார்த்திடுவர்..
சிறிதளவு தானுயர்ந்தால்
சுய புராணம் பாடிடுவர்..

பிறப்புக்கு வாழ்த்து சொல்லி
இறப்புக்கு இரங்கல் சொல்லி
இரண்டையும் கடந்து செல்லும்
இவ்வுலகம் மாயமன்றோ?

No comments: