17/07/2018

கவிச்சரம்- 103 -----உரிமைகள்

தலைப்பு : உரிமைகள்
+++++++++++++++++++++

தமிழ்த்தாய் வணக்கம்
**********************
அகிலத்து மொழிகளிலே
ஆதியிலே பிறந்த மொழி!
அத்தனை மொழிகளுக்கும்
ஆதாரம் ஆனமொழி!
அம்மொழியைப் பெற்றெடுத்த
அன்னையினை வணங்குகிறேன்!


தலைமை வணக்கம்
*******************
அகிலத்தின் பொதுமொழியாம்
ஆங்கிலத்தைப் பயின்றாலும்
அழகுத்தமிழ் செம்மொழியில்
அருங்கவிதை படைக்கின்ற
கவிச்சரத் தலைமையினை
கவிதையினால் வணங்குகின்றேன்!

அவை வணக்கம்
*****************
பரிசும் சான்றிதழும்
பாராட்டுப் பத்திரமும்
எதனையும் எதிர்பார்க்கா
எத்தனையோக் கவிஞர்கள்
எழுத்தில் சிறக்கின்ற
எந்தமிழ்ப் பட்டறையை
எளிய கவிஞன்நான்
எம்கவியால் வணங்குகின்றேன்!

உரிமைகள்
***********
மக்களாட்சி தத்துவத்தின்
மகத்துவமாய்த் திகழ்கின்ற
உரிமைகளே நம்முடைய
உடைமையென உணர்ந்திடுவோம்!
உயிரான உரிமைகளை
உருக்குலைக்க முயல்வோர்க்கு
போராட்ட உரிமையினால்
யாரென்று காட்டிடுவோம்!

மொழியுரிமை
**************
நம்முடைய மொழிதானே
நம்முடைய அடையாளம்.....
நம்மொழி அழியுமெனில்
நாமிருந்து என்ன பயன்?!!
நம்முடைய எண்ணங்களை
நம்மொழியில் வெளிப்படுத்த
நமைத் தடுக்கும் அதிகாரம்
நாட்டிலே யாருக்குண்டு?!
அப்பாவின் முதல் எழுத்தை
ஆங்கிலத்தில் போடச்சொன்ன
கையெழுத்து முறைமையினை
தமிழெழுத்தாய் மாற்றிடுவோம்..
முகநூலில் வாழ்த்துகின்ற
முத்தான வாழ்த்தெல்லாம்
சத்தான தமிழ்கொண்டே
நித்தமும்நாம் வாழ்த்திடுவோம்...

நன்றி நவில்தல்
**************
அறிஞர்கள் அவையிலே
கவிஞர்கள் சபையிலே
எனக்கும் வாய்ப்பளித்த
எழில்மிகுப் பட்டறையை
மனமாலே மொழியாலே
மகிழ்வோடு வணங்குகின்றேன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ.இராசா

No comments: