03/01/2022

கோவிட் மூன்றாம் அலை ---- ஓடுங்க ஓடுங்க

 




மிகவும் கட்டுப்பாடு மிகுந்த குட்டி நாடான கத்தாரில் இருந்து, போன டிசம்பர் மாதம் இந்தியா வந்தபோதுகூட இவ்வளவு கொரோனா இருக்கவில்லை. ஆனால், தற்சமயம் மிகமிகக் கூடுதலாக உள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.

இந்தியா போவதற்கு முன்பாக நானும், என் மனைவியும் பூஸ்டர் ஊசியோடு சேர்த்து மூன்று ஊசிகள் போட்டிருந்தோம். என் பையன் இருண்டு ஊசிகள் போட்டிருந்தான். 72 மணி நேரத்திற்குள்ளான PCR test வேறு எடுத்தோம். இதுபோக ஏர்சுவேதா என்ற மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துதான் இந்தியா போய்வந்தோம். இவ்வளவு கெடுபிடிகளோடு போனாலும், இந்தியாவில் யாருமே கொரோனாவை மதித்ததாகவே தெரியவில்லை. கடைகள், பேருந்துகள், கோவில்கள், உணவகங்கள்.....என எங்கெங்கு காணினும் கூட்டம் கூட்டமே... கண்டிப்பாக கொரோனோவே அக்கூட்டத்தில் சிக்கியிருந்தாலும் மூச்சுத்திணறி செத்திருக்கும் என்பதை அங்குள்ளோர் அனைவரும் அறிவரே...

அதையெல்லாம் தாண்டி விடுமுறை முடிந்து மீண்டும் கத்தார் வரலாமென்றால் 72 நேரத்திற்குள்ளான PCR test மீண்டும் எடுக்க வேண்டும். திருப்பத்தூரில் எடுத்து சிவகங்கை மருத்துவக்கல்லூரி பெயரிட்ட சான்றிதழ் தொகுப்பு சுமார் 800 பேருக்கு வந்ததிலிருந்து, நம் சான்றிதழைப் பிரித்தெடுக்க நம்ம கோயம்புத்தூர் தம்பி சுரேந்தரக்குமார் உதவியும், அதை நகலெடுக்க திருச்சியில் என் அத்தாச்சி உதவியும் தேவைப்பட்டது. அப்புறம் ஒரு வழியா அதையெல்லாம் எடுத்துக்கிட்டு திருச்சி விமானநிலையம் போனால் அங்க ஒரு மனுஷன் ஒவ்வொரு எழுத்தா எழுத்துக்கூட்டி பேரில் பிழை இருக்கிறதா என்று பார்க்கிறான். (நல்லவேளை கொரோனாப் படிவத்தை நான்தான் கடவுச்சீட்டு எண்ணோடு ஆங்கிலத்திலேயே எழுதிக்கொடுத்தேன்)

அதை முடித்து கத்தார் போனால், மிகப்பெரிய வரிசையில் நின்றோம். முதலில் ஊசிபோட்ட சான்றிதழ் கேட்டார்கள், பின்னர் PCR test சான்றிதழ், அதன்பின் இரண்டு நாட்கள் ஹோட்டலில் தங்கும் அறைக்கான முன்பதிவு பத்திரமென அனைத்தையும் சரிபார்த்து, அந்த வரிசை கத்தார் சுங்கச்சோதனை சென்றது... அப்படியே அந்த வரிசை மீண்டும் எந்த வாகனம் கூட்டிச் செல்லும் என்பதற்கான ஒரு படிவம் தரும் வரிசை சென்றது....... மீண்டும் நீண்டு சென்ற வரிசை வாகனம் நிற்குமிடம் வரை சென்று, அங்கே ஒரு வாகன ஓட்டியிடம் விட்டது. அவர் அப்படியே எங்களை ஹோட்டலில் கொண்டுபோய்விட அங்கிருந்து தங்கும் அறைக்கேக் கொண்டுபோய் அடைத்துவிட்டார்கள். இதில் என்ன கொடுமைனா நான்கு பேருக்குக் கட்டாயம் இரண்டு அறை எடுக்க வேண்டுமென்பது விதி. (நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தங்கலாம். அதுவேறு)

இரண்டு நாட்களும் வெளியே எல்லாம் செல்லமுடியாது. மறுநாள் 12 மணி அளவில் மீண்டும் PCR test எடுத்தார்கள். இரண்டாம் நாள் காலை அல்லது மதியம் வரவேண்டிய முடிவு மாலை 6:30க்குத்தான் வந்தது. (தற்சமயம் கொரோனா எண்ணிக்கைக் கூடியதால் முடிவு தாமதமாகிறதாம்) அதுவும் எனக்கு மட்டுமே முடிவு வந்தது. மற்ற மூவருக்கும் வரவில்லை என்பதால் Rapid Antigen test எடுப்பதாகவும் அதில் உடனேயே முடிவு வந்துவிடும் என்றும் கூறினார்கள். (அடப்பாவிகளா அந்தக் கருமத்தை முதலிலேயே எடுத்தால் எதுக்குடா இரண்டு நாட்கள் அறைக்கு பணம் அழுகனும்). எல்லாக் கரும test களையும் எடுத்து இரவு 10 மணிக்கு விட்டார்கள். (இதில் இரண்டாம்நாள் மதியம் இரவு சாப்பாடு தரமாட்டார்களாம். காரணம் நமக்கான காலி செய்யும் நேரம் முடிந்துவிட்டதாம். test result தாமதமானதால் கட்டணமின்றி கூடுதலாகத் தங்குவதற்கு மட்டும் சலுகையாம்.‌ அடிங்கடா...அடிங்கடா..எம்பூட்டு)

என்னதான் கொரோனா இல்லையென்று முடிவு வந்தாலும் கைப்பேசியில் உள்ள ஒரு விஷேச செயலியில் நிறம் மாறினால்தான் வெளியே எங்கும் செல்லமுடியும். எனக்கோ நிறம் உடனடியாக மாறவில்லை. ஒரு 12 மணி நேரத்திற்குப்பின்னர் ஒருவழியாக பச்சை நிறமாக மாறிவிட்டது. அப்பதான் பெருமூச்சே வந்தது.

அதெல்லாம் சரின்னு அலுவலகம் போனால், அங்கே கொரோனாக் கெடுபிடிகள் தாறுமாறாக உள்ளது. அதாவது மூன்றாம் அலை வீசத்தொடங்கிவிட்டதாம். இன்னும் பயம் போகவில்லை. ஊசி போட்டவர்களுக்குக் கொரோனா வருகிறதாம். அடக்கருமத்த... அப்புறம் என்ன இதுக்குடா ஊசிபோட்டோம்னு கோபம் வருதுதான்....என்ன செய்ய...கோபப்பட்டா நம்மல ஒதுக்கிட்டு ஓடிருவாங்களே....ஓடுங்க..ஓடுங்க...மூன்றாவது அலை வந்திருச்சாம்...இன்னும் எத்தனை பூஸ்டர் ஊசிபோடனுமோத் தெரியலையே....ஓடுங்க ஓடுங்க...

✍️செ. இராசா

No comments: