27/01/2022

நீ கொஞ்சம் மூடு

 


நீ கொஞ்சம் மூடு என்றால்; அது
வாய்மூடும் கட்டளைச் சொல்லாகிறது...
உண்மையில்..
வாயும் கண்களும்தானே
மூடும் படியுள்ள புலன்கள்!

வாய்மூடி மௌனித்தால்
கேளா சப்தமும் கேட்கிறது...
வாய்மூலம் மூச்சுவிட்டால்
குறட்டையொலி காதைப் பிளக்கிறது..

கண் மூடி தியானித்தால்
அகமிங்கே விழிக்கிறது‌‌...
கண்திறந்து தூங்கினால்
அறுப்பதாயிங்கே அர்த்தமாகிறது

இங்கே...
மூக்குக்கும் காதுக்கும்தான் மூடி இல்லை
ஆனால்..
மூக்கை மூடினால்
முடிந்துவிட்டதாய் அர்த்தமாகிறது!
காதுகளை மூடினாலும்
ஏறக்குறைய அப்படித்தான்...

ஆக...
மூட வேண்டியதை
மூடவேண்டிய நேரத்தில்
மூடத்தான் வேண்டும்...
அதற்காக...
எப்போதும் மூடினால் எப்படி?!

ஆமாம்....
வந்தவுடன் செய்வதாய்க்கூறிய
வாக்குறுதிகள் என்னாச்சு?
ஓ...
கேட்டால் நீ கொஞ்சம் மூடு என்பார்களோ?!

✍️செ. இராசா

No comments: