10/01/2022

பொய்க்கோபம் ---- வள்ளுவர் திங்கள் 193




தொந்தரவு செய்யாமல் தூரப்போ என்றாலும்
சிந்தைக்குள் பூக்கும் சிரிப்பு!
(1)

கடுமுகம் காட்டிக் கதைக்கின்ற போதும்
சுடுவதே இல்லையுன் சொல்
(2)

சண்டைபல போட்டுச் சமாதானம் ஆனாலும்
சண்டைகள் ஓயாச் சடங்கு
(3)

எவ்வளவு செய்தாலும் என்செய்தாய் என்றுரைத்தால்
அவ்வளவும் பொய்யாகும் அங்கு
(4)

ஊரடங்கு போட்டாலும் ஓயாக் கொரானாபோல்
யாரடங்கிப் போவாரோ இங்கு?!
(5)

உன்னைப்போல் யாருள்ளார் உள்ளன்பில் என்றவுடன்
என்னிடமே யாரென்றால் யாது?!
(6)

பொய்க்கோபம் காட்டியிதழ் புன்னகைக்கும் அந்நேரம்
மெய்மறந்து போகும் விரைந்து?
(7)

கவிதைக்குள் பொய்போல்தான் காதலுக்குள் என்றேன்
கவிஞனே பொய்யென்றாள் காண்
(8)

புருவங்கள் மேலேறே பொய்க்கோபம் காட்டும்
அருவத்தில் உள்ளதுதான் அன்பு
(9)

உன்நினைவாய் உள்ளதென உண்மையில் நானுரைத்தால்
என்ன சரக்கென்றாள் இன்று?!
(10)

✍️செ. இராசா

No comments: