11/01/2022

எச்சில்



எச்சில் என்றால் அருவருப்பா?!

யார் சொன்னார்கள்?
புதிய காதலர்களுக்கு
எச்சில் புனிதநீர்!
பிஞ்சுக் குழந்தைகளுக்கு
அது புன்னகைநீர்!

ஆம்...

பாலோடு கலந்த தேன்போல்
வாயிலே ஊறிய நீரென்று
எச்சிலை உச்சியில் வைத்தது யார்? வள்ளுவரில்லையா?!

பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
பாதி தின்று தந்ததால் இலட்ச ருபாய்
இப்படி எச்சிலை விலையேற்றியது யார்
வைரமுத்தில்லையா?!

காதலியின் எச்சில் அமிர்தம்தான்
அதற்காக மற்றோரின் எச்சிலை எப்படி
ச்சீ....ச்சீ

பொறுங்கள்....
அன்னை தந்த எச்சில்தானே உடல்!
தந்தை தந்த எச்சில்தானே உயிர்!

தவளைகள் எச்சிலாக்காமலா
ஏரிநீர் குடிநீராகிறது?!
கோப்பைகள் எச்சிலாகாமலா
தேநீர் நாநீராகிறது?!

எங்கே...
எச்சில்படுத்தா வேதமொன்று சொல்லுங்கள்?!
இல்லை....
வார்த்தையாவது சொல்லுங்கள்...

எச்சிலை எச்சிலென இகழாதீர்!
எச்சிலில் உள்ள
என்சைமில்லையேல்
யாருக்கும் செரிமானமில்லை...

எச்சிலை எச்சிலென துப்பாதீர்!
எச்சிலில் உள்ள
வெப்பமானி இல்லையேல்
யாருக்கும் பரிணாமமில்லை..

எனில் துப்பவேண்டாமா?!
துப்புங்கள்...
பல் துலக்கையில் மட்டும்
சொல் விளக்கையில் அல்ல....

✍️செ. இராசா

No comments: