22/04/2019

ஐவகைக் கடமைகள்


உயிருடல் மனமென மூன்றினையும்
ஒழுங்காய்க் காக்கும் வழியறிந்து
முதலில் தன்கடன் செய்வதையே
முதலாம் கடமை என்றறிவோம்

இயல்புடை மூவரைக் காப்பதினை
இல்லறப் பண்பென நன்குணர்ந்து
இல்லறம் இனிதென வாழ்வதையே
இரண்டாம் கடமை என்றறிவோம்!

சுற்றமும் சூழலும் விலகாமல்
பற்றிய நட்பினை வெறுக்காமல்
ஊன்றிய கோலாய் நிற்பதையே
மூன்றாம் கடமை என்றறிவோம்!

ஊறின்றி அனைவரும் உய்வடைய
ஊருக்கு உதவுதல் நான்கென்றால்
வையகம் தழைக்க முயலுவதே
ஐந்தாம் கடமை என்றறிவோம்!

ஐவகைக் கடமையை நன்குணர்ந்து
ஐந்தையும் சரிவரச் செய்பவனை
அறத்தின் சான்றென அறிந்திடுவோம்!
அவனே சான்றோன் வணங்கிடுவோம்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

#ஐவகைக்_கடமைகள்

No comments: