13/03/2022

குறளுரையாடல்-அந்தாதி

  


*குறளுரையாடல்*
×*×*×*×*×*×*×*×*×*
*அந்தாதி*
×*×*×*×*×*
#ஒற்றைப்படை_இராசா
#இரட்டைப்படை_அசோகன் சுப்பிரமணியன்.
&&&&&
பேசிப் பொழுதெலாம் வீணாகிப் போச்சுது
காசும் கரைந்துதான் ஆச்சு!
(1)

ஆச்சுதான் என்செய்ய? ஆனாலும் அப்பொருளின்
வீச்சில்தான் போறோமே வீழ்ந்து !
(2)

வீழ்தலென்றும் மண்ணில் நிரந்தரம் அல்ல
வாழ்தலுக்கு வேண்டும் உரம்!
(3)

உரம்கூட போட்டதுபோல் ஒன்றுக்கும் ஆகா
சிரம்கனம் கொண்டார் செயல்!
(4)

செயல்களில் சீர்மை இலங்குதல் வேண்டும் புயலெனப் போர்த்தும் புவி!
(5)

புவிவாழ்வை விட்டுவிட்டுப் போகின்ற முன்னே
கவியுலகின் கோவாவேன் காண்!
(6)

காண்கின்ற காட்சிகளைக் கையருகே கொண்டுவர
வேண்டும்வரை வண்டமிழைத் தீட்டு!
(7)

தீட்டுகின்ற திட்டம் தெளிவாய் இருக்குமெனில்
ஆட்டத்தில் வென்றிடலாம் ஆம்!
(😎

ஆமெனும் சொல்லும் அகத்தினில் உண்மையைச்
சாமமும் செப்பிடும் பார்!
(9)

பாரெல்லாம் போற்றுகிற பைந்தமிழ்ப் பாட்டுகளை
நேரலையில் ஏற்றிடுவோம் நன்று!
(10)

நன்றென்னும் நற்பண்பை நானிலம் போற்றுதும்
இன்றே புரிவோம் இனிது!
(11)

இனிதாய் எழுதிடவே ஏங்குகிறோம் நாளும்
கனிவுடன் பைந்தமிழைக் கற்று!
(12)

கற்றலின் மேன்மையைக் கண்குளிரக் காண்போமே
சுற்றமும் சூழும் வியந்து!
(13)

வியந்திடும் உச்சத்தில் வீற்றிருக்கும் போதும்
தயங்காமல் போகும் தமிழ்!
(14)

தமிழே நமக்கென்றும் தாரக மந்திரமாம்
இமைபோல் இருப்போம் இசைந்து!
(15)

இசையும் கவியும் இணையும் தருணம்
அசையாச் சிலையாய் அகம்!
(16)

அகத்தில் அதிகமாய் அன்பைப் பயிர்செய்
செகத்தில் செழிக்கும் புகழ்!
(17)

புகழ்பெற்ற பின்னும் புறந்தள்ள வேண்டாம்
அகம்புறம் கொண்ட அறம்!
(18)

அறத்தினும் உன்னத ஆக்கமும் ஏது
திறத்தால் தெளிவோம் மதி!
(19)

மதிப்புள்ளோர் யாரும் வழக்கினை வைத்தால்
பதிலளிக்கும் முன்பார்த்துப் பேசு!
(20)

No comments: