02/03/2022

யார் சொன்னார்கள்...புராணங்கள் புளுகென்று!


 

யார் சொன்னார்கள்?
புராணங்கள் புளுகென்று!
யார் சொன்னார்கள்?
அத்தனையும் கதையென்று!
 
பாண்டுவால் அல்லாமல்
பாண்டவர்கள் பிறந்ததெப்படி?!
 
மூத்த மனைவி குந்திக்கு
மூன்று பேர்களாலும்
இளைய மனைவி மாத்திரிக்கு
இரண்டு பேர்களாலும்
நேரடியாய் அல்லாமல்
நேர்ந்ததுதான் எப்படி?!
ஆம்...
 பிந்தைய விந்துதான முறையின்
முந்தைய முன்னோட்டம்தானே அது!
 
கௌரவர்கள் அனைவரும்
கன்னிவழி வந்ததெப்படி?
திருதராஷ்டிரனின் விந்துவும்
காந்தாரியின் அண்டமும் சேர்ந்தக்
கருமுட்டையைப் பிரித்துத்
தனித்தனியே பானையிலிட்டு
செயற்கையாய் ஊட்டமூட்டி
இயற்கைபோல் ஈன்ற
இன்றைய சோதனைக்குழாய் முறையின்
அன்றைய சாதனைதானே அது?
 
இன்று சீனா உருவாக்கிய
செயற்கைச் சூரியனை வியக்கிறோமே..!!
அன்று கர்ணனின் திறமைக்கு
பரசுராமர் கொடுத்த சவாலென்ன?
செய்முறைத் தேர்வே
செயற்கைச் சூரியன்தானே
அது...
ஆச்சரியமில்லையா?!
 
உலகையே உலுக்குமென
ஒவ்வொருமுறை உரைக்கும்
அன்றைய பிரம்மாஸ்திரம் யாது?!
இன்றைய நியூக்ளியர் பாம் அல்லவா?
 
அதெல்லாம் இருக்கட்டும்....
 
எங்கோ நடக்கும் ஒன்றை
எங்கேயோ இருந்தபடி
நேர்வதை எல்லாம் அப்படியே
நேரலையில் கண்டு சொன்ன
சஞ்சயனின் செய்கையின்று
சாத்தியம் ஆகலையா?!
 
பலராமர் வந்தால்தான்
நலமாகும் என்றெண்ணி
சகுனி உரைத்ததுமே
சட்டென்று கூட்டிவந்த
வாகனங்கள் இந்நாளில்
வான் மார்க்கம் போகலையா?!
 
இலங்கைப் போர்முடித்த
இராமன் சீதையெல்லாம்
நாடு திரும்புகையில்
நடந்தா சென்றார்கள்?!
மிதக்கும் கல்லெடுத்து
மிதவைப் பாலமும்
எரிக்கும்படி அமைத்த
அரக்கு மாளிகையும்
மறைக்கும்படி செய்த
மாய மாளிகையும்
கற்பனை எனவொதுக்கும்
கட்டுக்கதை தானா?
 
அக்ரோணி சேனைகளும்
சக்கர வியூகங்களும்
வெறும்போர் எனவொதுக்கும்
வெற்றுக்கதை தானா?
இல்லை... இல்லை
கற்பனையே என்றாலும்
கற்பனைக்கும் காலுண்டு
காலம் கனிந்தால்.....
 
✍️செ. இராசா

No comments: