20/03/2022

குறளுரையாடல் --- ஈற்றெடுப்பு அல்லது அந்தாதி

 


#குறளுரையாடல்
#ஈற்றெடுப்பு_அல்லது_அந்தாதி
#20_03_2022
#ஒற்றைப்படை_இராசா
#இரட்டைப்படை_அசோகன்

மேல்நோக்கில் பார்த்து வியக்கின்ற யாவர்க்கும்
கீழ்சுடும் தீயுண்டு கேள்!
(1)

கேள்வி யெழுப்பக் கிளைக்கும் அனைத்தையும் வேள்வியை வைத்து விளம்பு.
(2)

விளம்பிய பின்னாலும் வேண்டுமெனக் கேட்கும்
விளங்காத கூட்டம் விடு
(3)

விடுதலை யென்றும் விலங்கை யடைத்தேத்
தொடுவாய் சிகரம் திளைத்து.
(4)

திளைத்ததைச் சொன்னால் தெரியுமா? இல்லை
திளைத்தால் தெரியுமா? சொல்!
(5)

சொல்லுக சொற்களில் செந்தமிழ் தோய்த்துடன்
அள்ளுவீர் ஆயிரம் அகத்து.
(6)

அகத்திலே நோவிருந்தும் ஆன்றோர்கள் என்றும்
சகத்தின்முன் சொல்லாமை சால்பு
(7)

சால்பென்னும் பண்பதும் சர்க்கரைப் பாகெனப்
பாலுடன் சேர்த்துப் பருகு!
(😎

பருகிய பைந்தமிழைப் பாவாய்ப் படைத்து
விருந்தோம்பும் மாண்பை விரும்பு
(9)

விரும்பிய தெல்லாம் விருந்தாய் அமைய
அரும்பிடும் ஆசையும் வீண்.
(10)

வீண்வாதம் செய்வோர்முன் வேறேதும் பேசாமல்
மாண்புடன் மௌனமாய் வா
(11)

வாவென மண்ணில் வரவேற்கும் பண்புகளைத்
தாவெனத் தாரணியில் கேள்.
(12)

கேள்விகள் கேட்போரைக் கேவலமாய் எண்ணாத
ஆள்வோர்கள் வாய்த்தால் அழகு
(13)

அழகென்னும் ஓவியம் அகத்துள் இருக்கும்
எழிலாய் எழுதுவோம் ஏடு
(14)

ஏட்டில் எழுதுகிறார் ஏதோ எழுதியபின்
வீட்டில் நடக்கின்றார் வேறு
(15)

வேற்றுமை எங்கிலும் வேரூன்றல் நன்றன்று
கூற்றுவன் கொஞ்சும் குணம்
(16)

குணமென்னும் குன்றேறி கோபுரமாய் நின்றால்
வணங்குவர் எல்லோரும் வந்து
(17)

வந்து தழுவும் வசந்தமும் என்றுமே
முந்து தமிழின் முகம்.
(18)

முகத்தின்முன் போற்றி முதுகில்பின் குத்தும்
பகட்டான நட்பில் பலர்
(19)

பலரும் வியக்கப் பயனுற மொழிதல்
மலராய்ச் சொரிந்திடும் மேல்!
(20)

✍️இருவரும் இணைந்து

No comments: