22/03/2022

குறளுரையாடல் --- ஈற்றெடுப்பு அந்தாதி -----மையக்கரு கவி

 


 #குறளுரையாடல்
#ஈற்றெடுப்பு_அந்தாதி
#மையக்கரு_கவி
#ஒற்றைப்படை_இராசா
#இரட்டைப்படை_அசோகன்
#22_03_2022

கவிக்குக் கவியாய் கவிமழை பெய்யும்
கவிஞனுக்கு எல்லாம் கவி
(1)

கவிதை மனத்தைக் கவர்ந்தே இழுக்கும்
புவியில் தமிழே பொலிவு
(2)

பொலிவுடன் ஏற்றிப் புகழை அடையும்
வலிமையை என்றும் வணங்கு
(3)

வணங்குதல் என்றும் விளக்கின் சுடராம்
இணங்கித் தருமே இனிப்பு.
(4)

இனிப்புச் சுவைக்குள் இருக்கும் வகைபோல்
இனிதே கவியால் இயம்பு
(5)

இயம்பிடும் சொல்லினில் இன்தமிழ் வேண்டும்
சுயம்பெனச் சுற்றும் சுகம்.
(6)

சுகம்பல தந்திடும் சுத்தத் தமிழால்
சகத்தில் நிலைப்பீர் தனித்து
(7)

தனித்தே இருப்பின் தனித்துவ மில்லை
அணைப்பீர் உறவை அகத்து.
(😎

அகத்தில் பதிகின்ற அத்தனையும் பின்னால்
பகரும் கவிப்பொருள் பார்
(9)

பாரினில் யாவரும் பண்புடைத் தோழரே
யாரிதைச் சொல்வார் யுகம்.
(10)

யுகத்தில் கலியுகமாம் யோகிகள் சொல்வர்!
அகத்தில் கவியுகமாய் ஆற்று!
(11)

ஆற்றுக என்றும் அறச்செயல் நன்றெனப்
போற்றிடும் பொன்போல் புவி.
(12)

புவியுலகில் காண்கின்ற பொய்களை எல்லாம்
கவியுலகால் சீர்செய்து காட்டு
(13)

காட்டுக மண்ணில் கனிவுடன் அன்பினை
நீட்டும் புகழை நெகிழ்ந்து.
(14)

நெகிழ்ந்து கவிக்கையில் நீரெனப் பாய்ந்து
தகிக்கும் இதயம் தழுவு
(15)

தழுவிடும் பண்பினைத் தாரணி வாழ்த்தும்
முழவினைக் கொண்டு முழங்கு.
(16)

முழங்கும் பறைபோல் முழங்கிடும் சொல்லைப்
புழங்கும் முறையில் புகுத்து
(17)

புகுத்துவோம் என்றும் பொலிவாய் மனிதம்
வகுத்தோர் வழியினில் வாழ்.
(18)

வாழ்வே கவியென்று வாழ்கின்ற பேருக்கு
வாழ்க்கையில் எல்லாம் வரம்
(19)

வரமாய் உளத்தில் வசிக்கும் தமிழில்
கரப்போம் தினமும் கவி!
(20)

✍️ இருவரும் இணைந்து

No comments: