20/08/2021

சமையல் ருசி - அல்சர்க்கா (#ALZARKA)

 



இது நான் என்றோ எழுதிய குறுங்கவிதை..
ஆம்... பெரும்பாலும் அனைவருமே செய்வதுதான். உணவைப் பாராட்டிவிட்டு உபசரிப்பவருக்கு நம்மால் முடிந்த சிறு அன்பளிப்பைத் தருவோம். யாரும் சமையல் செய்பவருக்கு அதே அன்பளிப்பு கொடுத்துள்ளோமோ என்றால் சற்றே யோசிக்கத்தான் வேண்டும். 
 
நான் கத்தார் வந்த காலத்தில் இருந்து வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமை காலை அல்சர்க்கா (#ALZARKA) என்கிற உணவகத்தில்தான் சாப்பிடுவேன்‌. இப்போது வரையும் அப்பழக்கத்தை விடவில்லை. அதற்குக் காரணம் அந்த உணவகத்தின் அதிக சுவை மற்றும் மிகக்குறைந்த விலை மட்டுமல்ல....அதையும் தாண்டிய ஏதோ ஒரு அன்னியோன்யமே...
 
இது மலையாளி உணவகமாக இருந்தாலும் அனைத்து நாட்டினரும் வந்துபோகும் உணவகம். இரண்டு குடும்பங்கள் சாப்பிட்டால்கூட 50 ரியால் (1000/-ரூ) தான் வரும். இந்த உணவகத்தின் முதலாளிதான் முதன்முதலாக கத்தாருக்கு வந்த மலையாளியாம். அதுவும் எப்படி?!! கேரளா-பம்பாய்-பாகிஸ்தான்-ஈரான் வழியாக கடல்வழி, தரைவழி...என்றும் விமானம், படகு, நடந்தேயென....பல வழிகளிலும் வந்து சேர்ந்துள்ளார். (இத்தகவல்கள் உள்ள நாளிதழை அங்கே படமாக்கி வைத்துள்ளார்கள்) இதன் காரணமாகவே இந்த உணவகத்தில் கத்தாரிகளும் அதிகமாக வந்து போகின்றனர். நானும் தொடர்ந்து வருவதால் எனக்கும் எப்போதும் இங்கே மரியாதை உண்டு.
 
அப்படித்தான் இன்றும் சாப்பிடப்போனேன். ஆலு புரோட்டா, பூரி......எல்லாம் வர வழைத்தோம். அதில் ஆலு புரோட்டாவின் சுவை மிகவும் தூக்கலாக வழக்கத்தைவிட அற்புதமாக இருந்தது. சாப்பிட்டு முடித்தவுடன் சர்வரை அழைத்து, அந்த ஆலு புரோட்டா செய்துவருக்குத் தனியாக என்னால் முடிந்த சிறு அன்பளிப்பைக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். உண்மையில் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.
 
ஆமாங்க...நாம் கொடுக்கும் சின்னச்சின்ன அங்கீகாரங்கள்தான் நம் வாழ்வை இனிதாக்குகிறது என்றால், அதை அனைவருக்கும் பகிர்ந்தளித்தால் எப்படி இருக்கும்?! நீங்களே சொல்லுங்கள்...
 
✍️ செ. இராசா

No comments: