02/03/2021

அனுபவப் பதிவு-7-----------கடத்தல் திட்டங்கள்---கட்டுரை

 



நடிகர் விஷால்போல் ஒல்லியாக உயரமாக நல்ல கருப்பாக இருந்த நம்ம ஊரு இராணுவ கேப்டன் மந்திப்பத்தரில் இருந்த எங்கள் ஆலைகளுக்குள் நுழைந்ததுமே கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா?!... நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்? மற்றும் ஏன் வந்தீர்கள்? என்றுதான். எங்கள் முதலாளி அங்கே உள்ளக் குழுவினருக்கு பணம் கொடுப்பதால் கண்பாணிப்பு வளையத்தில் இருப்பதாகவும் மேலும் ஃபேக்டரிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தடுப்புச்சுவரில் இருந்து 5 மீட்டரில் எந்தப் புதிய பொருட்கள் கிடந்தாலும் தொடவேண்டாம் என்றும் அப்படி ஏதேனும் கண்டால் உடனே தெரியப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
அவர் அப்படிக் கூறிச்சென்ற சில நாட்களிலேயே எனக்கு அங்கே உள்ள காவல் நிலையத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. உடனே என்னை நேரில் வாருங்கள் பேசவேண்டும் என்றார்கள்.
காவல்நிலையத்தின் வெளியே மூன்று நபர்கள் துப்பாக்கிக் குண்டுகளால் சுடப்பட்டு கிடந்தார்கள். ஒரே கூட்டமாக இருந்தது. ஒருவித பயத்துடன் காவல்துறை உயர் அதிகாரியைச் சந்தித்தேன். அவர் கூறிய விடயம்தான் என் வாழ் நாளில் இன்று வரை மறக்க முடியாத விடயம்.
அதாவது அவர்கள் மேகாயாவின் காரோ பகுதியைச் சேர்ந்த ஒரு சிறு குழுவாம். காட்டில் மறைந்திருந்து ஒவ்வொரு முக்கிய புள்ளிகளாக்க கடத்தி அவர்களைச் சார்ந்தவர்களிடமிருந்து பணம் பறிப்பதே அவர்களின் நோக்கமாம்‌. வேறு எந்த பொதுநல நோக்கமும் கிடையாது. அப்படி அவர்களைச் சுட்டபோது அவர்களின் சட்டைப்பையில் இருந்த பெயர் வரிசையில் என் பெயர் முதலிடத்தில் இருந்ததாம். என்னைக் கடத்தும் சில மணித்துளிகளின் முன்னர்தான் சுடப்பட்டுள்ளார்கள் என்றும் கவனமாக இருக்கவும் கூறினார்கள்.
இப்படிச்சொன்னால் எப்படி இருக்கும் உறவுகளே..... கேட்டவுடனேயே தலை சுற்றியது. என்னதான் வீட்டில் இருந்து கோபமாக மற்றவர்களுக்காக சாவதே மேல் என்று இங்கே வந்து நான் வேலை பார்த்தாலும், அதற்காக இப்படியா?! ஒன்றும் புரியவில்லை...உடனே முதலாளியிடம் தகவலைத் தெரிவித்தேன். அவருக்கு உள்ளதுபோல் எனக்கும் பாதுகாப்பு வழங்கினால் வேலை பார்ப்பேன் இல்லையேல் என்னை விட்டுவிடுங்கள் என்றேன். ஆம்... அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலாளி ஒருவர் எப்போதும் இருப்பார். எனக்கும் அதுபோல் வேண்டுமென்றேன்.
மேலும், இந்த வகை மிரட்டல்கள் வருவது அங்கே புதிதல்ல என்றாலும் இப்படிக் காகிதத்தில் பெயருள்ளதைக் கேள்விப்பட்ட போது கொஞ்சம் பயந்துதான் போனேன்.
இப்படித்தான் முன்னர் ஒருமுறை மேகாலயாவில் தொடர் பந்த் நடந்தபோது சும்மா இல்லாமல் ஏதாவது ஒரு வேலை கொடுக்க என்று நினைத்த முதலாளி, அஸ்ஸாமில் உள்ள அவருடைய தேக்கு தோட்டத்தை சர்வே செய்து கணிப்பொறியில் ஒரு வரைபடமாக சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இப்படித்தான் எனக்கு வரும் வேலையெல்லாம் புதுமையானதாக முன் அனுபவம் இல்லாதவையாகவே இருக்கும். இருந்தாலும் எப்படியாவது யோசித்து செய்துதருகிறேன் என்று சம்மதித்து ஒரு 20 பேர்கள் கொண்ட குழுவோடு 15 நாட்கள் சர்வே செய்தோம். 50000 தேக்கு மரங்கள் உள்ள இடத்தில் 15000 மரங்களைக் காணவில்லை. 35000 மரங்கள் தான் இருந்தது. அவைகளை எப்படி பாதுகாப்பது அவை ஒவ்வொன்றிற்கும் எப்படி எண் வழங்குவது. அவைகளை எப்படி கணிப்பொறி கோப்பாக்குவது என்பதே சர்வேயின் பிரதானமாக வைத்து மிகவும் சிறப்பான முறையில் செய்துகொடுத்தேன். முதலாளி மெய்சிலிர்த்துக் கட்டித் தழுவினார். அந்த சர்வேயின் போது நான்கு மாடி உயரத்தில் தேக்கினால் செய்த ஒரு டவரில் அமர்ந்து ஜொங்கா என்று சொல்லும். அவர்களின் சுண்டக்கஞ்சியும்
(Rice bear) அங்கேயே ஆற்றில் ஓடுகின்ற கெலுத்தி மீன்போன்ற ஒருவகை மீன்கள் சாப்பிட்டதும் மறக்க முடியாத ஒன்றே....
அடுத்து ஒரு சம்பவம் நடக்க இருந்தது. அதுதான் அங்கே ஹைலைட். அதாவது 16ஆம் நாள் சுதந்திர தினம், அன்று யாரையாவது கடத்தி தங்களை நிரூபிக்க காத்திருந்த உல்பாப் படை எங்களைத் தூக்குவதாக இருந்தனராம். 16ஆம் நாள் வந்து தேடியும் உள்ளனர். நாங்கள்தான் 15ஆம் நாளோடு வேலையை முடித்துவிட்டோமே...அதனால் சிக்கவில்லை.
இப்படி முதலிலேயே ஒரு அனுபவம் எனக்கு நேரடியாக இருந்தததாலும் மேகாலயா அனுபவம் மிகவும் மோசமாக இருந்ததாலும் முதலாளியும் நிலைமையைப் புரிந்து கொண்டு ஒரு முக்கிய முடிவெடுத்தார்.
....தொடரும்

No comments: