08/03/2021

அனுபவப் பதிவு-10---நீச்சல் தொட்டி---Swimming pool----கட்டுரை

 #அஸ்ஸாம்_மேகாலயா


 

தொழிற்சாலைகள் கட்டுவதற்காக நியமித்த என்னிடம் தனக்கான அனைத்து வேலைகளையும் வாங்கிக்கொண்டார் என் முதலாளி. அப்படி வாங்கிய வேலைகளில் ஒன்றுதான் நீச்சல்குளம் அமைக்கும் பணியும். தொழிற்சாலைப் பணிகள் முடியும் தருவாயில் திடீரென்று ஒருநாள் என்னை முதலாளி தலைமை அலுவலகம் வருமாறு அழைத்திருந்தார். அங்கே ஏற்கனவே டில்லியில் இருந்து வந்த ஒரு நபர் அமர்ந்திருக்க ஒரு பெரிய Swimming pool மற்றும் அதனோடு இணைந்த ஒரு Baby pool வரைபடத்தை என்னிடம் காண்பித்தார்கள். அதைச் சுத்தம் செய்ய ஒரு கீழ்நிலைத்தொட்டி மற்றும் வடிகட்டும் இயந்திரம் (Filter tank) அடங்கிய அமைப்பு, இதுபோக நீச்சல் தொட்டியில் குளித்தவுடன் மீண்டும் குளிக்க ஒரு குளியலறை, அதையொட்டி விருந்தினர் அறை மற்றும் Billiards என்னும் பந்து விளையாட்டறை.. இவையெல்லாம் வெளியே தெரியாமல் இருக்க கேண்டிலீவர் அமைப்பில் பீம் கொண்ட தூணமைத்து அதன்மேலே ஒளி ஊடுருவும் கூரை அமைக்க வேண்டும்.....இப்படி அனைத்தையும் விரிவாகச்சொன்னார்கள்.

இதையெல்லாம் கேட்டபிறகு, நான் முதலாளியிடம் எனக்குத் தனியாக 50,000 ரூபாய் இப்பணிக்காக வேண்டுமென்று கேட்டேன். (அப்போதெல்லாம் எவ்வளவு கேட்க வேண்டுமென்றுகூட தெரியாது...அட இப்போதும்தான்) உடனே சம்மதம் தெரிவித்தார். ச்சும்மா சொல்லக்கூடாது, நான் அஸ்ஸாமைவிட்டு வரும்போது கேட்டதைவிட அதிகமாகவே கொடுத்தார். ஆம்... அந்த வேலைகளைச் செய்ய வந்த டில்லிக்காரர் மொத்த வேலையையும் தானே செய்வதாக நினைத்துதான் வந்திருந்தார்போலும். பாவம்...மெக்கானிக்கல் வேலை மட்டும் அவரிடம் கொடுத்துவிட்டு மற்ற அனைத்து வேலைகளையும் என்னிடம் கொடுத்துவிட்டார் என் முதலாளி. வந்தவர் எத்தனை மாதங்கள் சிவில் வேலைகளுக்கு எடுத்துக் கொள்வீர்கள் என்று நக்கலாகக் கேட்டார்?! உடனே முதலாளி என்னைக் காண்பித்து... இவர் யார் தெரியுமா?!....எங்க சிவில் இஞ்சினியர்... இவருக்கு ஒரு மாதம் போதும் என்று... அவரிடம் பெருமையாகவும் சற்றே செருக்கோடும் பேசினார். நமக்கு உள்ளூர சந்தோசம் என்றாலும் கூடவே ஒருவித அச்சம் கலந்த பயமும் இருந்தது. அவர் ஆச்சரியமாகப் பார்த்தார்.....நான் இதற்கு முன்பு Swimming pool செய்திருக்கவில்லைதான் ஆனால். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு தைரியம் எங்கிருந்தோ வந்துவிடும். இரவு பகல் பாராமல் தொடர்ந்து வேலை செய்து வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தேன். சென்னையில் Consultantஆக உள்ள என் நண்பன் APS AP Senthil Kumar ) யிடம்தான் அவ்வப்போது சந்தேகங்களைக் கேட்டுக்கொள்வேன். இப்போதுவரை அவன்தான் என்னிடம் பணம் வாங்காத personal consultant என்றால் அது மிகையல்ல. நன்றிடா நண்பா...

அது ஒரு நல்ல அனுபவம். இத்தாலியன் டைல்ஸ், unter water lighting, வயதானவர்கள் நீர் தொட்டிக்குள் அமர்ந்திருக்கும் போது அவர்களின் முதுகில் மஸாஜ் செய்வதுபோன்ற அமைப்பு, வெளியே டெரகோட்டா டைல்ஸ்....என் பார்த்துப் பார்த்து செய்து அதில் தண்ணீர் நிரப்பி விட்டார்கள். முதன் முதலில் சோதித்துப் பார்க்க நான் குளிக்கவா என்று மேனேஜரிடம் கேட்டபோது... இல்லை இல்லை முதலில் முதலாளியம்மா தான் குளிக்க வேண்டுமென்று எனக்கான அனுமதி மறுக்கப்பட்ட ஒரு சம்பவம்தான் என்னால் இப்போதுவரை மறக்கவே முடியாத சம்பவம். நானும் அண்ணாமலை படத்தில் ரஜினி பாணியில் எழுதிவச்சுக்க...இந்த நாள்.. என்றெல்லாம் பேசிவிட்டு.. பிற்காலத்தில் நாமும் ஒரு Swimming pool கட்டவேண்டும் என்றெல்லாம் நினைத்தேன். அப்புறமென்ன?!.. அதை ஏன் கேட்குறீங்க. சிரிப்புதான் வருகிறது. அதெல்லாம் உலகியல் சம்பந்தப்பட்டதென்று என் நினைவில் இருந்தே அகன்றுவிட்டது. (ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும்).

அவ்வப்போது அந்த நீச்சல் குளத்தில் சினிமா ஒளிப்பதிவு நடப்பதாகச் சொல்லும்போது எனக்கும் மிக மகிழ்ச்சியாகவே இருக்கும்.

அஸ்ஸாமில் அந்த நேரத்தில் இணையதள வசதி வேண்டுமென்றால் ஒரு 50 கிமீ தாண்டி கோல்பாரா போக வேண்டும். பிறகு மன்மோகன் சிங் தயவால் கிராமப் பஞ்சாயத்துக்களில் அங்கே அந்த வசதி வந்தது‌. உண்மையில் அந்த ஊர்களில் அதைப் பயன்படுத்திய ஒரே ஆள் நானாகத்தான் இருக்கும். துத்னையில் இருந்து மட்டியாவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு முன்கூட்டியே நான் வருவதாகப் போன்செய்துவிட்டுச் சென்றால் அவர்கள் ஜெனரேட்டரில் டீசல் போட்டுத் தயாராக இருப்பார்கள். பிறகு எனக்காக இணையவசதி செய்து தருவார்கள். அங்கிருந்த போதுதான் என் யாகூ கூகுள் மின்னஞ்சல் முகவரி எல்லாம் உருவாக்கினேன் என்பதால் இன்னும் civilrajaassam என்றே என் முகவரிகள் இருக்கின்றன. இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இவ்வளவு கஷ்டங்களுக்கிடையேதான் நான் வெளிநாட்டு வேலைகளுக்கு முயற்சி செய்தேன் என்பதைச் சொல்வதற்காகவே.

அஸ்ஸாமில்தான் நன்றாகப் போகிறதே....பிறகு ஏன் வெளிநாடு போகவேண்டும் என்று நீங்கள் யோசிக்கலாம். உண்மைதான்.. ஆனால் கொடுக்கும் சம்பளம் மிகக்குறைவாயிற்றே.. மேலும், எவ்வளவு அடைத்தாலும் அப்பாவின் கடன் அடைய மாட்டேன் என்று அடம்பிடிக்கிறதே....அட நாமும் ஒரு வீடாவது கட்ட வேண்டாமா....?! இப்படில்லாம் கனவு வந்துகொண்டே இருந்ததால் மீண்டும் மீண்டும் முயற்சித்தேன். மலேசியாவில் உள்ள சோமய்யா அவர்களின் உதவியால் ஒரு வேலை கிடைப்பதாக இருந்தது. சரி இங்கிருந்தால் சரிவராது...முதலாளியிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்றால் அவர் விடுவதாக இல்லை. எவ்வளவோ தடுத்துப்பார்த்தார். ஒரு கட்டத்தில் வலுக்கட்டாயமாக கூறிவிட்டு கிளம்பி சொந்த ஊர் வந்து விட்டேன்.

ஆனால்....மூன்று மாதங்களாக முயற்சி செய்கிறேன். மலேசியா வேலையும் கிடைக்கவில்லை, எந்த வேலையும் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் மீண்டும் முதலாளியிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அவர் தென்னிந்தியா வருவதாகவும் என்னைக் கேரளாவில் வடக்கம் பரவூரில் உள்ள சாந்திமடம் வந்து பார்க்கும்படியும் கேட்டுக் கொண்டார். நானும் நண்பன் சிவாவை Siva Thamilappan அழைத்துக்கொண்டு பழனி வழியாக கேரளா சென்றேன்.

✍️செ.இராசா

No comments: