22/03/2021

கல்வியின் சிறப்பு------------குறள் வெண்பாக்கள்---வள்ளுவர் திங்கள் 152


 

படிக்கப் படிக்கப் படிக்கின்ற பாடம்
படிக்காத நூல்கள் பல
(1)

கற்றதாய்ச் சொல்லிக் கதைக்கின்ற சொற்களே
கற்றதைக் காட்டிவிடும் காண்
(2)

அடிமுடி இல்லாத ஆண்டவன் போலே
முடிவதே இல்லைப் படிப்பு
(3)

வேகாத பூரியில் வந்திடும் சப்தம்போல்
போகாத புத்தியின் போக்கு
(4)

பயின்றதாய் வாங்கிடும் பட்டங்கள் எல்லாம்
பயிற்சியின் சான்றெனப் பார்
(5)

தலையில் கனமுள்ள தீக்குச்சி எண்ணி
தலைக்கனம் என்றும் தவிர்
(6)

தன்னையும் தன்சூழ் தரணியையும் கற்காமல்
என்னதான் கற்றாலும் வீண்
(7)

அறத்தில் நழுவாமல் ஆற்றிடும் செய்கை
சிறப்பான கல்விப் பயன்
(8)

உயர்வென்றும் தாழ்வென்றும் உள்ளத்தில் எண்ணார்
உயர்நிலையில் கற்றோர் உணர்
(9)

மற்றவை எல்லாம் மறையலாம் என்றைக்கும்
கற்றவை தந்திடும் கை
(10)

✍️செ.இராசா


No comments: