15/03/2021

இதழகல் வெண்பாக்கள் உதடுகள் குவியாது ஒட்டாது

 #கடவுள்_வாழ்த்து
#இதழகல்_வெண்பாக்கள்
#உதடுகள்_குவியாது_ஒட்டாது
#ம_ப_வ_உ_ஊ_ஒ_ஓ_ஔ_இனங்கள்_வராது

இயற்கையை ஆயார் இறையினைக் காணார்!
இயற்கையை ஆழத்தில் ஆய்!
(1)

அறத்தை நினையார் அகநிறை ஆகார்!
அறத்தால் அகத்தை நிறை!
(2)

அரனே அரியாய் அறியாச் சிலரே
சிரத்தில் சிறியார் தெளி
(3)

கற்றிடக் கற்றிடக் கற்றிடல் யாதெனில்
கற்றிடல் தீராக் கடல்!
(4)

#இதழகல் செய்தேன் இறையால் இனிதே
இதற்கினி சாட்சி இல!
(5)

அடியால் அளந்த அரியை நினைந்தேன்!
அடியாய் அளந்தான்! அறி!
(6)

எண்ணிய எண்ணத்தை எட்டிட எண்ணத்தால்
கண்ணனைக் கண்ணாறக் காண்
(7)

✍️செ.இராசா

தொல்காப்பியம் பற்றிய "பயப்படாதீர்கள்" என்கிற கி.வா.ஜெகந்நாதன் ஐயா அவர்களின் நூலைப்படித்தபோது அதில் உதடுகள் ஒட்டாத மற்றும் குவியாத எழுத்துக்களைப் பற்றியும் அதில் சாதித்த பலரைப் பற்றியும் எழுதியிருந்தார்கள். அதாவது, ம ப வ உ ஊ ஒ ஓ ஔ வகை எழுத்துக்களை பயன்படுத்தாமல் படைக்க வேண்டும். எனில் மொத்தம் 119 எழுத்துக்கள் அடிபடுகிறது. அப்படி உதடுகள் ஒட்டாமல் மற்றும் குவியாமல் வைப்பதை நிரோட்டகம் அல்லது இதழகல் என்கிறார்கள். இதில் பலரும் அந்தாதிகளே படைத்துள்ளார்கள (நிரோட்டக யமக அந்தாதிகள்) இவற்றை இணையத்தில் படித்து அசந்துபோனேன். யமக என்றால் திரும்ப திரும்ப ஒரே வார்த்தை வெவ்வேறு பொருளில் அடிதோறும் வருவது.

சரி நாமும் குறள் வெண்பாக்கள் எழுதுவோமே என்று முயன்றபோதே உணர்ந்தேன். ஆகா‌‌... எவ்வளவு கடினமான முயற்சியென்று. ஆம்... பெரும்பாலான வார்த்தைகள் பமவ வில்தான் வருகிறது. (சிலர் பமவ மட்டும் தவிர்ப்பார்கள் உ ஊ ஒ ஓ ஔ பற்றி கவலைப்படுவதில்லை. அது தவறென்றே நினைக்கிறேன்) வெண்பாவில் உகரமும் இல்லாமல் படைப்பது அடுத்த சவால்?...அப்புறம் கருத்தும் வரவேண்டும் எளிமையாகவும் இருக்க வேண்டும். எப்படியோ... மிகவும் கடினமான முயற்சியாலும் தமிழன்னையின் உதவியாலும் இதோ ஏழு குறள் வெண்பாக்கள் படைத்துள்ளேன்.

உண்மையில்...தமிழ் சாதாரண மொழியல்ல!!!

வாழ்க தமிழ்!

#வள்ளுவர்_திங்கள்_151

No comments: