05/03/2021

அனுபவப் பதிவு-8-------------நேர்மையின் சோதனை----கட்டுரை

 


தொடர்ந்து வந்த கடத்தல் அச்சுறுத்தலை நினைந்து முதலாளி எனக்காக ஒரு முக்கிய முடிவெடுத்தார். அவருக்கு எப்போதும் ஒரு துப்பாக்கி ஏந்திய காவலாளி உள்ளதுபோல் எனக்கும் ஒரு பாதுகாவலரை துப்பாக்கி இல்லாமல் நியமித்தார். அந்த நபர் கும்ஃபு கராத்தேபோல் டைகாண்டு என்ற தென்கொரியத் தற்காப்புக் கலை சொல்லிக்கொடுக்கும் மாஸ்டராவார். அவரின் கீழ் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றார்கள். அவருக்கு 3000 ரூபாய்ச் சம்பளம் (2004ல்) கொடுத்து எனக்காகக் கூட்டிவந்தார். அவருடைய வேலை என்னவென்றால் காலை முதல் மாலை வரை என்னுடன் கூடவே இருந்து என்னை யாரும் அடித்துவிடாமல் கண்காணிப்பது மட்டுமே. இங்கே நான் அவர் என்று சொன்னாலும் அவர் 23 வயதுள்ள சின்னப் பையன் தான். ஆனால் திடகாத்திரமான உயரமான பையன். ஆரம்பத்தில் என்னோடு தொடர்ந்து பயணித்த அந்தப் பையன் சில காலங்களுக்குப்பின் அவனையும் அங்கிருந்தவர்கள் மாற்றிவிட்டனர். என்னோடு பணிபுரிந்த சில சூப்பர்வைசர்கள் அவனுக்கும் பண ஆசை காட்டி எனக்குத் தெரியாமல் சில வேலைகளில் ஈடுபடுத்தினர். பொதுவாக நமக்கு எதிரிகள் வெளியில் இருப்பது கிடையாது. உடன் சகோதரன் போல் பேசி பணிபுரிபவர்களே. அவர்கள் கொள்ளையடிக்க நாம் இடையூறாக இருப்பதால் அவர்களே அடியாட்களையும் அனுப்பி மிரட்டியுள்ளார்கள். அந்த உண்மையையும் சற்று தாமதமாகவே கண்டுபிடித்தேன்.
 
ஒரு முறை எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தது. பத்து நாட்கள் வேலைக்கே வரவில்லை. அந்த நேரத்தில்தான் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் முதலாளியின் காதுக்கு அவர்கள் செய்த ஊழல் தெரிந்தது‌. இருப்பினும் முதலாளி அவர்கள்மேல் மிகப்பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குக் காரணம்.... அவரைப் பொறுத்தவரை அங்கே உள்ளவர்கள் அனைவரும் பணம் அடிப்பவர்களே. அதில் குறைவாக அடிப்பவர்கள் சற்றே நல்லவர்கள். அதில் என் நேர்மை அவரை மிகவும் வியக்க வைத்துள்ளது.
 
அஸ்ஸாம் மேகாலயாவில் தொழிற்சாலைகள் நடத்த வேண்டுமென்றால் நிறைய பணத்தை வாரி இறைக்க வேண்டும். யார் யாருக்குத் தெரியுமா ?!...அங்கே உள்ள அனைத்து இரவுடிகளுக்கும், பெரிய மற்றும் சிறிய குழுக்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் மற்றும் அவ்வப்போது பொதுமக்களுக்கும் கொடுக்க வேண்டும். அவரின் வீட்டிற்கு எதிர்புறம் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. அதில் முதலாளியின் அலுவலகத்தில் கூப்பன் வாங்கி அங்கே உள்ள அனைவரும் இலவசமாகத்தான் பெட்ரோல் டீசல் போடுவார்கள். இப்படிப் பாவம் அவரும் நிறைய கொடுத்துத் கொடுத்துதான் அனலத்து நிறுவனங்களும் நடத்துகிறார் என்றால் சற்றே யோசியுங்கள்...அங்கே வாழ்வது எவ்வளவு கடினமான விடயம் என்று. 
 
அவரும் சிலபல கோக்குமாக்கு விடயங்கள் செய்யத்தான் வேண்டும். அப்போதுதான் அவராலும் அள்ளிவிட முடியும். அவர் அங்கே செய்தவற்றையெல்லாம் நான் இங்கே சொன்னால் நன்றாக இருக்காது என்பதால் அதை மட்டும் தவிர்த்துவிடுகிறேன். அது முதலாளி விஸ்வாசமும் ஆகாது. (இந்த இடத்தில் நான் விபீஷணன் அல்ல. கும்பகர்ணன்)
எனக்கான எதிர்ப்பு வலுப்பெறும்போதெல்லாம் அவர் என்னிடமே சொல்லுவார்.."இராஜா நீ ரொம்ப நேர்மையாய் இருக்காதே... கொஞ்சம் அப்படி இப்படி இருக்க பழகிக்க....உனக்கும் வேண்டுமென்றால் எடுத்துக் கொள்" என்பார். உண்மையில் இப்படி எந்த முதலாளிதான் சொல்வார்? நீங்களே சொல்லுங்கள்.
 
இப்படியெல்லாம் முதலாளியே சொன்னதால், எனக்கும் ஒரு முறை பண விடயத்தில் சின்ன சபலம் வந்தது...ஆம்..ஒருமுறை தீபாவளியை முன்னிட்டு காவல் நிலையத்தில் இனாம் கொடுக்கச் சொன்னார்கள். 10000 ரூ எடுத்துக் கொண்டு 2 காவல் நிலையங்களில் தீபாவளி இனாமாக 5000 ரூ ரூபாய் கொடுக்கச் சொன்றேன். அப்போது அருகில் இருந்த சூப்பர்வைசர் சொன்னான். சார்...‌ நீங்கள் 3000+ 3000 கொடுத்துவிட்டு 4000ரூ ஐ வைத்துக்கொண்டால் யார் கேட்கப்போகிறார்கள். நானும் அவன் கூறியதை சிறு சபலத்தில் சம்மதித்து ரூ 6000 ரூ கொடுத்துவிட்டு 10000 ரூ என்று கணக்கெழுதிவிட்டேன். ஆனால்...அங்கிருந்து அலுவலகம் போகும் வழியில் என் கை கால் எல்லாம் ஆடியது. உடல் நடுங்கியது. அலுவலகம் போனமாத்திரத்தில் முதல் வேலையாக அந்தக் காகிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டு உண்மையான கணக்கை எழுதிக் கொடுத்துவிட்டு நிம்மதி பெருமூச்சோடு ஒரு நடை நடந்தேன் பாருங்கள்....ஆகா...ஆகா அது..அதுதான் நேர்மையின் சுகம் என்பதை நன்றாக உணர்ந்தேன்.
 
இளம்வயதில் கொடுக்கும் வேலைகள் எதுவாக இருந்தாலும் தவறில்லாமல் செய்பவன் என்ற மிடுக்கும் எனக்கு நிறையவே இருந்தது. ஆனால் அவைகளையும் உடைத்தெறியும் சம்பவங்கள் இரண்டு நடந்தேறின. 
 
....தொடரும்

No comments: