26/03/2021

அனுபவப் பதிவு 14--------கல்லூரி வாழ்க்கை தொடக்கம்----கட்டுரை



அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்துரையாடலில் வருடந்தோறும் 1.5 இலட்சம் மற்றும் வருடாந்திர கட்டணங்கள் கட்டினால் போதும் என்று கூறினாலும், இதுசரிதானா? இல்லை சரிவராதா? என்ற குழப்பத்தில் பாண்டிச்சேரி ஜிப்மரில் மலேசியாவில் இருந்து வந்து மருத்துவப்படிப்பு படிக்கும் பெரியப்பா மகனைப் பார்க்கச் சென்றோம். அந்த நல்ல உள்ளம் சிலபல கேள்விகளை என் தந்தையிடம் கேட்டார்கள். பணமெல்லாம் கட்டி படிக்க வைக்க உங்களால் முடியுமா? அப்படியே முடிந்தாலும் உடனே வேலை கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் நான் தருவேனென்று என்ன உத்தேசம்? இப்படி பல கேள்விகள் கேட்க ஒரு வழியாக என் தந்தையாரும் குழம்பி மருத்துவமே வேண்டாம் என்ற நல்ல முடிவோடு வீடு வந்து சேர்ந்துவிட்டோம்.

சில நாட்களிலேயே அண்ணாமலையில் இருந்து பொறியியல் படிப்பிற்கான அழைப்பு வந்தது. மீண்டும் ஓர் குழப்பம் ஆரம்பமானது. நாங்கள் எதிர்பார்த்ததோ கட்டிடவியல் (CIVIL) ஆனால் வந்ததோ இயந்திரவியல் மற்றும் உற்பத்தியியல் (MECHANICAL & PRODUCTION) இருந்தும் என் தந்தையார் கட்டிடவியலிலேயே உறுதியாக இருந்தததால் அதையே மாற்றித்தரக் கோரினோம். அங்கேயும் ஒரு குழப்பம், கட்டிடவியலா (Civil) அல்லது கட்டுமானவியலா (Structural) எதில் மாற்ற வேண்டும் என்றார்கள். இக்கேள்விக்கு அன்றைய அறிவு நிலையில் விடை சொல்வதென்பது அவ்வளவு எளிதாக இல்லை. இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்று தெரிந்தவர்களிடம் கேட்டபோது, கட்டுமானவியல் என்றால் கணிதம் அதிகமாக இருக்கும் என்றார்கள். மேலும் இறுதிச் சான்றிதழில் Civil & Structural என்றே இருக்கும் என்றார்கள். சரியென்று சம்மதித்து படிப்பதற்காக பணமும் கட்டி சேர்த்தும்விட்டார்கள்

சிவகங்கையில் இருந்து சிதம்பரம் பயணமான எனக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கட்டிடங்கள் மிரட்டியது என்றே சொல்ல வேண்டும். எங்கள் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலைச் செட்டியார் சுதந்திரத்திற்கு முன்பாகவே கட்டிய கல்லூரி அது. ஒருமுறை பிரித்தானியா சென்றபோது அங்கே உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைப் பார்த்துவிட்டு அதேபோல் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் கட்டவேண்டுமென்று இடம் தேடியுள்ளார்கள். பொதுவாக அனைத்துச் செட்டியார்களுமே சிவ வழிபாட்டில் ஈடுபாடுள்ளவர்கள்தான். அதுவும் அவர்களின் பூர்விகமான கடலில் அழிந்த பூம்புகாரின் அருகிலேயே, சிவதளங்களின் தலைமைத் தளம்போல் வீற்றிருக்கும் தில்லையிலேயே கல்லூரி ஆரம்பித்தது ஆச்சரியம் இல்லைதான். முதலில் மீனாட்சி கல்லூரியாக இருந்து பின்னர் பல்கலைக்கழகமாகமாறி மிகப் பிரம்மாண்டமான வளாகத்தில் படிப்பதென்றால் சும்மாவா?

என் முதலாமாண்டுக்கான விடுதியென்பது 4 மாடிகள் கொண்ட மிகப்பெரிய கட்டிடம். மிகவும் புதிய கட்டிடத்தில் எனக்கான அறை இரண்டாம் தளத்தில் இருந்தது. கிராமத்தில் இருந்து வந்த எனக்கு, அச்சூழல் மிகவும் அந்நியமாக இருந்தது. என் அறைவாசிகள் ஆங்கிலம் கலந்த மிகவும் வாட்டசாட்டமாக பெரிய ஆளாக இருந்தார்கள். சீட்டு விளையாடிக்கொண்டு என்னையும் அழைத்தார்கள். அவர்கள் இயல்பாகவே இருந்தாலும் எனக்குத்தான் ஒருவிதமான பயம் தொற்றிக்கொண்டது. விடுதி உணவகத்தில்தான் எங்கள் ஊரைச் சேர்ந்த பள்ளி நண்பர்கள் வைத்தீஸ், அழகர்சாமி என்ற இருவரைச்சந்தித்தேன். அவர்கள் இயந்திரவியல் துறை எடுத்ததாய்ச் சொன்னார்கள். அவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள். என் சொந்த ஊரான அம்மன்பட்டி அருகேயுள்ள வீழனேரி மற்றும் நகரம்பட்டியைச் சேர்ந்தவர்கள். அவர்களைப்பார்த்துதான் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டேன். மூன்று பேரும் சேர்ந்து பேசி நான்காவது மாடியில் 447 என்ற அறையில் ஒன்றாகத் தங்கினோம். அந்த அறைக்கு "சிவகங்கைச் சிகரங்கள்" என்ற பெயரெல்லாம் வைத்து ஒரு கலக்கு கலக்கும் அளவிற்கு பின்நாளில் மாறினாலும் கல்லூரியின் முதலாமாண்டு என்பது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல்தான் இருந்தது. காரணம் நானோ தமிழ்வழிப் பள்ளியில் இருந்து வந்தவன், பாடங்கள் முழுவதும் ஆங்கிலத்தில் படுவேகமாக நடத்துவார்கள். ஒன்றும் புரியாமல் மிகப்பெரும் தாழ்வு மனப்பான்மையில் இருந்தேன். என்னைப்போலவே பலரும் இருப்பதைக் கண்டு அங்கேயே தமிழ்ச்சங்கம் ஒன்றையும் கூட்டிவிட்டோம்.

இன்னும் சொல்கிறேன்....

✍️செ. இராசமாணிக்கம்

No comments: