15/03/2021

குறளுரையாடல் அந்தாதி ------------கரு: தேர்தல் நடப்பு ----(நானும் மாமாவும்)


#நாள்_15_03_2021



வெண்பா வேந்தர் அகன் என்கிற அனுராதா கட்டபொம்மன் ஐயா அவர்களிடம் பல நாட்களுக்குப் பிறகு தேர்தல் நடப்பு குறித்து குறளுரையாடல் புரிந்தது மிகவும் மகிழ்வை தந்தது.

(அன்பின் மிகுதியால் அவர்களை மாமா என்று அழைப்பதால் இங்கே மாமா என்றே குறிப்பிட்டுள்ளேன்).

#காப்பு (#மாமா_அவர்கள்_வழங்கியது)
நன்றே நிகழ்ந்தேற நாயகனே நீயருள்வாய்.
நன்றி உரைத்தனன் நன்று.

#நான்_1
நன்றாகச் செய்தாலும் நன்றல்ல என்போர்க்கு
நன்றல்லா எல்லாமும் நன்று

#மாமா_2
நன்றென்று நம்பினால் நட்டாற்றில் தள்ளுவர்
இன்றெங்கும் உள்ளார் இளித்து

#நான்_3
இளித்தே கதைத்திங்கே எப்படியோ வெல்ல
அளிக்கின்றார் ஆயிரம் வாக்கு

#மாமா_4
வாக்கிங்கே வேண்டாமாம் நாக்குச் சுவைபோதும்
பாக்கோடு பட்டைச் சரக்கு.

#நான்_5
சரக்கினை நம்பித்தான் தந்துள்ளார் பாரீர்
சரக்கின்றி போனால் சரிவு

#மாமா_6
சரிந்ததைத் தூக்கியிங்குச் சாத்திவைப் பாரைத்
தெரிந்தேநாம் ஏற்றோம் சிரித்து.

#நான்_7
சிரித்து நகர்வதால் தீர்வொன்றும் இல்லை
தெரிந்தும் சிரிக்கின்றோம் சே!

#மாமா_8
சேர்ந்தார் செலவழிப்பர் சேரார் முகஞ்சுழிப்பர்
சீர்செய்தார்க் குண்டு சிறப்பு.

#நான்_9
சிறப்பான நல்வாழ்வை செய்திடுவோம் என்போர்
மறக்காமல் செய்வார் தமக்கு

#மாமா_10
தமக்கு தமக்கென்றால் தள்ளாதார் தாமாய்ச்
சுமப்பர் தலைமீதில் தாள்.

#நான்_11
தாளைப் பணிந்து தலைவா எனச்சொல்லி
தாளையே வாருவார் தள்ளு

#மாமா_12
தள்ளுவதைத் தள்ளித் தருவதைத் தந்தால்தான்
கள்ளமனம் வெல்லுமினி காண்.

#நான்_13
காண்போர் அனைவருமே கைப்பொத்தி நிற்பதினால்
வான்முட்ட அள்ளுகின்றார் வந்து

#மாமா_14
வந்துவந்துப் போவதெலாம் வாக்களிக்கும் மட்டுந்தான்
சொந்தம் பகையாகும் பின்பு.

#நான்_15
பின்புறம் குத்துவதில் பேய்போல் திரிகிற
தன்மையில் மூத்தோன் தலை

#மாமா_16
தலையிருக்க வாலாடும் சத்தியந்தான் வாடும்
வலைவிரிப்பர் ஓடிடலாம் வா

#நான்_17
வாருங்கள் என்றழைத்து வாங்குவதை வாங்கிவிட்டு
வாருவதில் வல்லவர்க்கே வாழ்வு

#மாமா_18
வாழ்வுவரும் போது மதியாதார் தன்னிலையில்
தாழ்வடையும் போதழுவர் சார்ந்து.

#நான்_19
சார்ந்த அமைப்பிற்கே சத்தியமாய் இல்லார்க்கு
தேர்தலில் கிட்டுமா தீர்ப்பு

#மாமா_20
தீர்ப்புவரும் நாளில் தெரிந்துவிடும் பூமணக்கும்
நார்மணக்கா தென்றறிதல் நன்று.

✍️மாமாவுடன்_நான்

No comments: