10/03/2021

அனுபவப் பதிவு-11--------அஸ்ஸாம் மேகாலயா இறுதிப்பகுதி--கட்டுரை

என் முதலாளி தென்னிந்தியா வர இருப்பதாகவும் அதில் கேரளாவிலும் பெங்களூரிலும் இரண்டு வேலைகள் உள்ளதென்றும், என்னை உடனே கிளம்பி கேரளாவில் வடக்கம் பரவூரில் உள்ள சாந்தி மடம் என்ற இடத்திற்கு வரச்சொன்னார். அந்த இடம் எங்கே உள்ளது எப்படிப்போக வேண்டும் என்றெல்லாம் தெரியாது. ஆனாலும் முதலாளி கூறினால் அவரின் அன்புக் கட்டளையைத் தட்டுவதும் இல்லை. உடனே என் நண்பன் சிவாவை அழைத்துக்கொண்டு பழனி வழியாக கேரளா சென்றடைந்தேன். அங்கே வடக்கம் பரவூரில் உள்ள சாந்தி மடம் அனைவருக்குமே தெரிந்திருக்கிறது. அந்த இடம் சென்று விசாரித்தபோது முதலாளி ஒரு பெரிய ஓட்டலில் தங்கி இருப்பதாகவும் அவர் எதற்காக வந்துள்ளார் என்றும் சொன்னார்கள். அதாவது அவர்களின் தோட்டத்தில் இருந்து வென்னிலா என்ற ஒரு செடியை 35 ரூபாய்க்கு வாங்கிச்சென்று அஸ்ஸாமில் உள்ளத் தேக்கு மரத்தோட்டத்தில் ஊடு பயிராக நடுவதே அவருடைய திட்டம். இந்தச்செடியில் வரும் ஒரு வகையான பூவித்துக்களில் இருந்துதான் வென்னிலா ஐஸ்கிரீம் செய்கின்றார்களாம். ஒரு கிலோ 3000ரூபாய் வரைப் போகிறதென்றும் (2005ல்) ஒரு செடியில் வருடத்திற்கு 3-5 கிலோ வரை வருமென்றும் சொன்னார்கள். இந்தச்செடியை அனுப்பி வைத்த பிறகு பலரும் இங்கிருந்து இச்செடிவாங்கிச் சென்று ஒரு செடியை 120ரூபாய்க்கு மேல் விற்றுள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்.
 
அந்த வியாபார விடயத்திற்கு என்னை ஒரு மொழிபெயர்ப்பு உதவிக்காக அழைத்திருந்தார்கள். அங்கே முதலாளி ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசுவதை தமிழில் நான் சொல்வேன், அவர்கள் பேசும் மலையாளத்தை நான் தமிழாக என்னுள் மாற்றம் செய்துகொண்டு அவரிடம் மொழி பெயர்ப்பேன்‌‌. ஒருவழியாக தங்கபாலுபோல் மாற்றி மாற்றி மொழிபெயர்த்தாலும் சமாளித்துவிட்டேன். எனக்குக் கேரளா சாந்தி மடத்தில் ஏகப்பட்ட மரியாதை. என்னைப் பாலக்காட்டில் உள்ள மிகப்பெரிய உணவகத்திற்கு அழைத்துச்சென்று தடபுடல் விருந்தெல்லாம் கொடுத்து இரயிலில் ஏற்றி விட்டார்கள். அந்த வேலை முடிந்த சில நாட்களிலேயே மீண்டும் பெங்களூர் அழைத்தார். நானும் ஒரு இடமும் விடுவதாக இல்லை. அவர் இழுத்த இழுவைக்கெல்லாம் சென்றேன். வேறு வேலையும் கிடைக்கவில்லையே...என்ன செய்வது?
 
பெங்களூர் சென்று மெஜஸ்டிக் பேருந்து நிலையம் அருகே அறை எடுத்து தங்கினேன். முதலாளி சிவாஜி நகரில் அவரின் தம்பி வீட்டில் தங்கி இருந்தார். அவரைச்சென்று பார்த்தபோது பெங்களூரில் உள்ள நல்மங்களா என்ற இடத்தில் ஒரு மின்சாரம் தயாரிக்கும் டீசல் ஆலையை அப்படியே இடம்பெயர்த்து மேகாலயாவில் அமைக்க வேண்டும் அதற்கு என் உதவி தேவையென்றார். நான் என்ன செய்ய வேண்டுமென்றேன். அந்த ஆலையின் வரைபடம் இல்லையாம். இப்போது உள்ளதை அப்படியே வரைந்து தரவேண்டும் என்றார். நானும் ரகீம் என்ற ஒரு தம்பியும் டேப்பால் அளந்து கையில் உள்ள மினி டிராப்டர் கருவியைக் கொண்டு ஒரே நாளில் படம் வரைந்து கொடுத்தேன். உடனேயே10000 ரூபாய் கொடுத்தார். அந்தக் காசு வந்த மகிழ்ச்சியில் மேலும் ஒருநாள் தங்கி பெங்களூரை சுத்திப்பார்த்தேன். ஐகான் கிருஷ்ணர் கோவில், சிவன் சிலை உள்ள ஒரு மால் மற்றும் கன்னடத்தில் சந்திரமுகி படம் என்றெல்லாம் பார்த்து விட்டு ஊருக்கு கிளம்புகையில் முதலாளி
மீண்டும் அஸ்ஸாம் வந்து இந்த நல்மங்களா மின்சார ஆலையை மேகலாயாவில் அமைக்க உடனே வரச்சொன்னார். என்னடா வாழ்க்கை இப்படிப்போகுதே....போவோமா வேண்டாமா என எனக்கு ஒரே குழப்பம்...
ஒன்றும் புரியவில்லை.
 
முதலாளி சொல்லும் வேலையைச் செய்துகொண்டே வெளிநாட்டுவேலை தேடுவோம் என்று ஒரு முடிவெடுத்து மீண்டும் சென்றால் அந்தத்திட்டம் நட்டமான திட்டமென்று கைவிட்டு விட்டார்கள். அதாவது டீசலில் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 4+ ரூபாய் செலவாகிறதென்றும் இதுவே வேறு எங்கோ விலைக்கு வாங்கினால்கூட குறைவாகவே வருகிறதென்றும் அந்த திட்டத்தை பாதியில் விட்டு விட்டார்கள் (எவ்வளவு விலை என்று சரியாக ஞாபகமில்லை). இப்போது எனக்கென்ன வேலை என்று கேட்டேன்?..எனக்கா வேலை இல்லை என்று என்னை முதலாளி தன் தொழில்நுட்ப PA போல் வைத்திருந்தார். தன் சிமெண்ட் ஆலையில் ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.. ஆகா... நாம் படித்த படிப்பில் இன்றுதான் முதன் முறையாக புண்ணிய பணி வந்துள்ளதென்று மகிழ்ந்தேன். கோவிலென்றால் நம்மூர்போல் நினைக்க வேண்டாம். இது வித்தியாசமாக வடநாட்டுப் பாணியில் இஸ்லாமிய மேஸ்திரிகளால் கட்டப்பட்ட சிறிய கோவிலாகும்.
அங்கே சில மாதங்கள் உருண்டோடின. மேலும் என்னதான் வேலைபார்த்தாலும் அப்பாவின் கடன் மட்டும் தீரவே இல்லை. பொருளாதார முன்னேற்றமும் வரவே இல்லை. என்ன ஆனாலும் சரி இனியும் இங்கே தொடர்வது எனக்கு நானே வைக்கும் தடைக்கல் என்று முடிவெடுத்து அஸ்ஸாம் மேகாலயா வாழ்வை 2006 ஆம் ஆண்டு முடித்துக்கொண்டு வெளிநாட்டிற்கு வேலை தேடி தமிழ்நாடு வந்தடைந்தேன்.
 
அன்று முதல் இன்று வரை அஸ்ஸாம் நினைவுகளைச் சுமந்து கொண்டே வாழ்கிறேன். அங்குள்ள பலரிடமும் இன்னும் தொடர்பில் இருக்கிறேன். மீண்டும் ஒரு சுற்றுலா போகவேண்டும் என்று ஆசையுள்ளது. ஆனால் போகத்தான் காலம் ஒத்துழைப்பு தரவில்லை.
 
இக்கட்டுரைகளில் விடுபட்டவை நிறையவே உள்ளன. இருப்பினும் நினைவில் இருந்த முக்கியமான விடயங்களை மட்டும் பகிர்ந்து விட்டேன் என்றே நினைக்கிறேன். என் பகிர்வு யாருக்கேனும் ஏதேனும் வகையில் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
 
அனைவருக்கும் இனிய மனமார்ந்த நன்றி
 
----முற்றும்-----



No comments: