20/09/2019

#மனம்_பழகு // #மனத்தைப்_பழக்கு






புலன்களுக்கும் புலப்படாத ஒன்று
புரியாமல் இருப்பது இன்னும்
புரியாத புதிர்தானே..
புரியும்படியே சொல்கிறேன்

20 ஹெர்ட்சுக்குக் கீழேயும்
20 கிலோ ஹெர்ட்சுக்கு மேலேயும்
நம்மால் கேட்க முடியாதாம்...

ஒருவேளை கேட்டிருந்தால்
சுனாமி வரும் போது
சுதாரித்திருப்போமே...
ஆனால்..
சுத்தும் பூமியின் பெரும் சப்தம்
நம்மை தூங்க விடுமா?!

இரவிலேயும் நன்றாய்ப் பார்க்கும்
உயிரினங்கள் பற்றி
எப்போதாவது யோசித்திருக்கிறோமா?!

ஒரு சூரியனையே
உற்றுப் பார்க்க முடியாதநாம்
ஓராயிரம் சூரியனாம் பரந்தாமனை
அருகில் பார்த்தானே பார்த்தன்
அந்த அனுபவத்தை
என்றாவது யோசித்திருக்கிறோமா ?!

வாசமில்லா மலரென்றும்
வாசமுள்ள மலரென்றும்
வாய்க்கு வந்தபடி பேசுகிறோமே..
எல்லா வாசத்தையும்
எல்லோராலும் உணரமுடியுமா?!

ஹைட்ரஜன் சல்பைடு என்ற
கொடுமையான வாயு (H2S)
மணம் இல்லாமலேயே
மரணம் தரும் விந்தையை
விக்கியிலாவது வாசித்திருக்கிறோமா?!

காகிதப்பூவின் மணத்தை
நம் மூக்கு உணராவிடில்
காகிதப்பூவிற்கு மணமில்லையென
நாம் கதைப்பது நியாயமா?!

சளி பிடித்த மூக்கில்
சந்தணம் மணக்காதபோது
சந்தணங்களே மணக்காதென
நாம் சத்தியம் செய்யலாமா?!

இனிப்பு சுவைத்த நாக்கில்
தேனீர் இனிக்காவிடில்
இனிப்பே இனிக்காதென
எங்காவது கதைக்க முடியுமா?!

தீயினால் சுட்டது ஆறுமென்றும்
நாவினால் சுட்டது ஆறாதென்றும்
பாவினால் சுட்டாரே வள்ளுவர்..
ஐயா...மன்னியுங்கள்
தீக்குழியில் இறங்கினாலும்
பூக்குழியாய் மாறும்போது
நா மட்டும் சுடுமா என்ன?!

வார்த்தைகளின் வெப்பம்
வாங்குபவர் பொறுத்ததல்லவா?
அவர்களின்..
மனத்தைப் பொறுத்ததல்லவா?!

இங்கே..
புலன்களின் எல்லையை
புலன்களால் தாண்ட முடியாதுதான்
ஆனால்...
மனம் நினைத்தால்
புலன்களை மட்டும் அல்ல
புவனத்தையே தாண்டலாமே..
அவ்வளவு ஏன்?!
மனம் நினைத்தால்
மனத்தையே தாண்டலாமே...!!!
ஆம்...
#மனம்_மகத்துவமானது!!!

#மனம்_பழகு
#மனத்தைப்_பழக்கு

No comments: