08/09/2019

#மண்






ஒரு மண்ணும் இல்லையென
யாரேனும் சொன்னால்
கவலைப்படாதீர்!

இங்கே மனிதனை விட
மண் ஒன்றும் மட்டமில்லை; ஆம்
மண் என்றும் மட்டுமில்லை

ஒருவேளை..
மண் என்றால் மட்டமெனில்
மண்ணிற்கு ஏன் இத்தனை அடிதடி?

வரலாற்றுப் பக்கங்களின்
வருகைப் பதிவேட்டைப் புரட்டுங்கள்;
மன்னர் கணக்காய் இருப்பதெல்லாம்
மண்ணாண்டோர் கணக்கே..:

வரப்புகளை இடம்மாற்றும்
வாய்க்கால் சண்டை முதல்
எல்லையில் கோடமைக்கும்
எதிரிநாட்டு சண்டை வரை
மண்ணில் நடப்பதெல்லாம்
மண்ணிற்கான சண்டையே...

ஆம்...இங்கே
தசரதச் சக்கரவர்த்தி முதல்
தருதலைச் சக்கரவர்த்திகள் வரை;
துரியோதனாதி முதல்
ஆல்பெர்ட் ஜியார்ஜ்வரை;
ஜவகர்லால் நேரு முதல்
நரேந்திர மோடி வரை;
ஆள்வோர் அனைவருமே
ஆள்வது மண்ணினையே..

மண்ணை வென்றதாய்
மமகாரம் கொள்ளாதீர்!
மண்ணே வெல்வதை
மரணத்தில் உணர்வீர்!

ஆனாலும்
சொந்த மண்ணின்றி
நொந்து சாவோர்க்கே
மண்ணின் மகத்துவம்
மண்டையில் உரைக்கிறது!

இங்கே...
மண் மட்டும் இல்லையெனில்
மரங்களுக்கு ஏது இருப்பிடம்!
மரங்கள் மட்டும் இல்லையெனில்
உயிர்களுக்கேது உறைவிடம்!

எனவே
மண்ணே மூலம்!
மண்ணே ஞாலம்!
மண்ணே ஞானம்!
மண்ணே எல்லாம்!

நிலமின்றிப் போகுமாயின்
நீர் இளைப்பாற இடமுண்டு
நிலமின்றிப் போகுமாயின்
நீர் இளைப்பாற இடமுண்டா?!

ஆமாம்...
மண்ணைப் பெண்ணென்று சொன்னது
சீதையைப் பிரசவித்ததற்காக அல்ல
பொன்னையும் பொருளையும்
தன்னகம் கொண்டதால் மட்டுமே..

எது எப்படியோ?!

கரி புதையுண்டால்
வைரமாகும்..
மனிதா நீ புதையுண்டால்
என்ன ஆவாய்?!
மண்ணாவாய்..
மறந்துவிடாதே...

மாண்புமிகு மண்ணாவாய்..

✍️செ. இராசா

No comments: