03/09/2019

#திருமாவளவ_கரிகாலற்_சோழன்_கதை


முன்னுரை
**********
அக நானூற்றிலும்
புற நானூற்றிலும்
சிலப்பதிகாரத்திலும்
சிற்சில இலக்கியத்திலும்
கரிகாலற் சோழன் பற்றி
கண்டபல பதிவுகளை
சகமறிய செய்துதந்த
சகந்நாதர்* அடி தொட்டு
அடியேனும் இக்கதையை
அடிசுருக்க முயலுகின்றேன்!
அடிகளிலே பிழை இருப்பின்
அன்னைபோல் பொறுத்தருள்வீர்!

சோழ முன்னோர்கள்
********************
எச்சோழன் முதற்சோழன்
அச்சோழன் நாமறியோம்!
முற்சோழன் வழி வந்த
நற்சோழன் கதையிதுவே!!

#இளஞ்சேட்சென்னி என்னும்
இளஞ்சோழன் ஒருவனுக்கு
#அழுந்தூரான்_மகளொருத்தி
அரசியாய் வந்திருந்தார்!

சோறுடைத்த சோழநாட்டில்
சோழனுக்கு வாரிசில்லை!
சோகத்திலே மூழ்கியவன்
சோர்வுடன் இருக்கையிலே
அனைவரும் மகிழுமாறு
அரசியார் கருவுற்றார்!

ஆயினும் அம்மகிழ்ச்சி
அதிகநாள் தொடராது
ஏதோ நோய்வந்து
இளஞ்சோழன் மாண்டுவிட
சோழநாட்டு மண்மீது
சோகமேகம் கவ்வியது!!!

திருமா வளவன் பிறப்பு
**^****^************
கருவுற்ற சேதியினை
ஒருவருக்கும் சொல்லாமல்
இராணியை இடம் மாற்றி
இரகசியம் காத்து வந்தார்;
#இரும்பிடர்_தலையாரெனும்
அருங்குணத் தமையனார்!

சாதகக் கணக்கொன்று
சாதகமாய் வருமானால்
தங்கையின் வாரிசு
தரணியையே ஆளுமென
மூன்று நாழிகைகள்
மூச்சடக்க வேண்டினார்!

தலையானார் சொல்படியே
தலைகீழாய்த் தாய்தொங்கி
#திருமாவளவன் எனும்
திருமகனை பெற்றெடுத்து
வரலாற்றின் பக்கத்தில்
வீரத்தாய் இடம்பிடித்தார்!

கொலை முயற்சி
****************
மகன் பிறந்த சேதியினை
மாயமாய் வைத்திருந்தும்
அவன் வளரும் சேதியோ
அனல் காற்றாய்ப் பரவிவிட
கயவர்கள் கூட்டமொன்று
கவ்வியது வளவனை!

தங்கையின் மனவலியைத்
தாங்காத தமையனும்
வளவனைக் காணாமல்
வருவதில்லை எனச்சொல்லி
உறுதிபூண்டவராய்
ஊரூராய்த் தேடினார்!

கரிகாலன்
**********
எங்கே எங்கேயென
எல்லைவரைச் சென்றபோது
எரியும் குடிசையொன்றில்
வளவன் குரல் கேட்டார்!

கதவை உடைத்தெறிந்து
காளையைக் கண்டபோது
எரிந்த காலோடு
இளவரசு ஓடி வந்தான்!

திருமாவளவன் எனும்
திருநாம இளவரசன்
கருகிய காலாலே
#கரிகாலன் என்றானான்!

யாருக்கும் தெரியாமல்
ஊருக்கும் திரும்பாமல்
கருவூரின் ஒரு ஓரம்
கரிகாலன் வளர்ந்து வந்தான்!

அரசியல் குழப்பமும் தீர்வும்
***************************
இளவேந்தன் இருந்திருந்தால்
என்றைக்கோ வந்திருப்பான்
இல்லாத ஒருவனுக்கு
இதற்குமேல் பொறுக்க வேண்டாம்!

அரசனாய் ஆள்பவனை
அரன் வந்து சொல்லட்டும்!
கோவில் யானையிடம்
கொடுத்திடுவோம் மாலையினை;
கழுத்தில் விழும் மாலை
காட்டட்டும் மன்னவனை!

அனைவரும் முடிவுசெய்து
அவிழ்த்துவிட்ட யானையோ
ஓடியது ஓடியது
எல்லை வரை ஓடியது
ஓடிக்களைத்த யானை
ஒதுங்கியது கருவூரில்

என்ன ஆச்சிரியம்?!
எதிர் பட்டான் “கரிகாலன்”
கழுத்தில் மாலை விழ
இளவரசே மன்னனான்!

வெண்ணிப்போர்
****************
சின்னப் பையனுக்கு
என்ன தெரியுமென
சின்னக் கணக்கிட்டார்
சிறுநில மன்னரெல்லாம்!

#பதினோரு_மன்னரோடு
#பாண்டிய_மன்னனும்;
#பெருஞ்சேர_லாதனெனும்
#பெருஞ்சேர_மன்னனும்;
சுருங்கிய மனத்தோடு
பெரும்படை திரட்டிவந்தார்!

இளங்கன்று ஆனாலும்
பயமின்றிப் பாய்ந்துவந்த
கரிகாலன் வீரம் கண்டு
கலங்கிவிட்டார் அனைவருமே!

பலமில்லா வேளிர் படை
குலமழிந்து ஓடியது..!
பாண்டிய மன்னர் படை
மண்டியிட்டு கதறியது...!!
பெருஞ்சேர மன்னர் படை
குருதியாற்றில் குளித்தது..!!!

இளஞ்சோழன் விட்ட அம்பு
பெருஞ்சேரன் நெஞ்சில் பட;
பொசுக்கென்று குருதியோடு
புகந்த அம்பு முதுகில்வர;
கன்னிப்போர் கண்டவனால்
காயம்பட்ட காரணத்தால்;
பலபோர் கண்ட சேரன்
பரிதவித்து உயிர் நீத்தான்!

வெண்ணி ஊரில்
கண்ட போரில்
வெற்றி பெற்ற கரிகாலன்;
மக்கள் அனைவராலும்
மதிப்பு மிக்க மன்னனானான்!

சோழத் தமிழ் நாடு
********************
அடிக்காமல் விட்ட பாம்பு
அடிக்கடி வருவதுபோல்;
மீண்டும் ஒரு கூட்டம்
மாண்டிட ஆசையுற்று;
வாகை எனும் ஊரில்
வாங்கிக்கட்ட வந்தார்கள்!

#எயினர்_நாகர்_ஒளியரென
எண்ணிக்கையில் ஒன்பதென
வந்த கூட்டம் அத்தனையும்
நொந்த கூட்டம் ஆகிநின்றார்!

இப்படியே விட்டுவிட்டால்
இனியும் வருவாரென
தமிழ்நாடு அத்தனையும்
தன்நாடாய் மாற்றிவிட்டான்!

சோழ இந்திய நாடு
*******************
பெரும் படை சேர்த்தபின்னே
பெருந் தேசம் வேண்டாமா?!
எல்லை விரிவடைய
இமயம் வரை போர் தொடுத்தான்!

சோழமலை சோழன்ஏரி
சோழன் பெயர் சொல்வதனை
சிக்கிம் பற்றி தேடிடுங்கள்
விக்கிகூட** சொல்லிடுவான்!

இமயம் வரை சென்ற வேந்தன்
ஏற்றி வைத்த புலிக்கொடியால்
வடநாட்டில் சிலமன்னர்
வரும்வழியில் போர்தொடுத்து
வலியெடுக்க வாங்கிக்கொண்டார்!
வரவேற்று(ம்) உபசரித்தார்!

காவிரிபூம்பட்டிணம்
********************
கண்ட வெற்றி அத்தனையும்
காண வைக்கும் சாட்சியாக
#அவந்தி_நாட்டு_மன்னன் வந்து
அழகுத்தோரண வாயில் செய்தான்!
#மகத_நாட்டு_மன்னன் வந்து
மண்டபத்தை கட்டி வைத்தான்!
#வச்சிர_நாட்டு_மன்னன் வந்து
முத்துப்பந்தல் செய்து தந்தான்!

இன்னும் இன்னும் எத்தனையோ
மின்னும் மின்னும் மண்டபங்கள்
நகரைச் சுற்றி கட்டி வைத்தான்
நாட்டை ஆண்ட கரிகாலன்!

கல்லணை
**********
பொங்கி வரும் காவிரியை
பொறுமையோடு அணையிட்டால்
நீர் வளத்தைப் பெருக்கிடலாம்!
நில வளத்தை உயர்த்திடலாம்!
எண்ணிய எண்ணம்போலே
எழுப்பிவிட்டான் கல்லணையை!

அழிவில் செய்த பட்டணமோ
ஆழியிலே மூழ்கியது!
ஆக்க செய்த கல்லணையோ
அவன் பெயரைச் சொல்கிறது!

உறையூர்
*********
இரண்டாம் தலைநகரம்
இப்போது பேசுகிறார்!
அன்றைக்கே அமைத்திருந்தான்
அன்றைய தமிழ் மன்னன்!

கல்லணையை பார்வையிட்டு
கரிகாலன் வரும்போது
பறந்து வந்த கோழி ஒன்று
பருந்துபோல கொத்தியதில்
துடிதுடித்த யானை கண்டு
துடிப்போடு யோசித்தான்!

அற்புத மண்ணில்தான்
அதிசயம் உறையுமென
உறையூர் மண்ணையே
உறைவிடமாய் மாற்றிவிட்டான்!
இரண்டாம் தலைநகரம்
இதுவென்றே கொக்கரித்தான்!

முடிவுரை
********
வீரனாய் வாழ்ந்த வேந்தன்
வள்ளலாய் வாழ்ந்த வேந்தன்
கல்லணையின் திறம்போலே
காலமெல்லாம் நிற்கின்றான்!- இன்று
ஞாலமெல்லாம் தெரிகின்றான்!

வாழ்க வாழ்க வாழ்கவென்று
வாழ்த்துகிறேன் மன்னவனை!
வாழ்க தமிழ் மன்னா!
வாழ்க நின் புகழ்!

#திருமாவளவ_கரிகாலற்_சோழன்_வாழ்க

No comments: