10/09/2019

#காற்று


ஆகாயம் பெற்றெடுத்த
ஆகாச சூரன் நீ!
எங்கும் நிறைந்துள்ள
இரண்டாம் பூதம் நீ!
நெருப்பு நீர் நிலமாகி
நிற்கின்ற மாயோன் நீ!

சூரியக் கனல் அடுப்பை
சூத்திரக் கணக்கிட்டு
சத்திரக் கூரையிலே
சக்கரக் கவசமிட்டு
ஐந்தடுக்கு கோட்டைகட்டி
அனைவரையும் காப்போன் நீ!

இருதய இயந்திரத்தை
இயக்குகின்ற எரிபொருளாய்
உயிர்களின் கணினிக்குள்
உலவுகின்ற மென்பொருளாய்
பிறப்பிலே உள் வந்து
இறப்பிலே பிரிவோன் நீ!

தெற்கிலே தென்றலாகி
வடக்கிலே வாடையாகி
கிழக்கிலே கொண்டலாகி
மேற்கிலே கோடையாகி
கவியாகவும் உறவாடி
கஜாவாகவும் கலக்குவோன் நீ!

உன்னிடம் ஒரு கேள்வி!

மரம் விடும் மூச்சை
மனிதனுக்குத் தந்து
மனிதன் விடும் மூச்சை
மரத்திற்குத் தந்து
மாறிமாறி இயங்கவைத்து
மாயாஜாலம் செய்கின்றாயே...
வளிவைத்து நீ செய்யும்
வழி மாற்றும் வித்தையில்
வலியில்லையா உனக்கு?!!

உண்மையில்..
உன்மேல் விடும் புகையென்பது
உன்னைக் கெடுக்க அல்ல...
எங்களுக்கு நாங்களே வைக்கும்
எரிகொல்லியே...

எங்களை மன்னித்துவிடு..
எங்களுக்காக நீ செய்த
ஓசோன் போர்வையைத்தான்
ஓட்டையிட்டுக் கெடுத்தோம்!

எங்களுக்காக நீ செய்த
வானலை வீதியில்தான்
வானொலிகள் ஏற்றி வதைத்தோம்!

பாவம்...
எங்கள் சுயநலத்தில்
எங்களோடு மாய்வது
எத்தனையோ ஜீவ ராசிகள்தான்

இப்படியெல்லாம் நடக்குமென
எப்போதோ தெரிந்துதான்
புராணங்களில் எழுதி வைத்து
பரிகாரமும் செய்கிறோம்போல்
ஆம்..
ஆஞ்சனேயராய் மாற்றியே
ஆழிமேல் பறக்க விட்டோம்!
பீமனாய் மாற்றியே
பிரித்து மேயவிட்டோம்!

காற்றே...
நீ ஊதும் தருணத்தில்
பாய்ச்சலில் செல்வது
பாய்மரப் படகு மட்டுமல்ல..
பாய்ந்திடும் உயிரணுக்களும்தான்..

காற்றே...
நீ ஊதும் தருணத்தில்
வேகமாய்ச் சுற்றுவது
காற்றாலைக் கருவி மட்டுமல்ல
கன்னியின் கருவண்டமும்தான்..

உண்மையில்...நீதான்
இயற்கையை இசையூட்டும்
புல்லாங்குழல்!

உண்மையில்..நீதான்
உலகை உயிர்ப்பிக்கும்
நாதஸ்வரம்!

இங்கே...நீயின்றி இல்லை கானம்!
இங்கே....நீயின்றி இல்லை யாதும்!

(உறவுகளே.....பஞ்ச பூதங்களையும் கவிதையாகப் படைத்த திருப்தியோடு 😊😊😊😊😊🙏🙏🙏😊 நன்றி நன்றி)

✍️செ. இராசா

No comments: