12/09/2019

#சொல்






சொல்லென்ற சொல்லே
சொல்லென்று சொல்லி
சொல்லியது என்னை...
சொல்லாமல் விடுவேனா?!
சொல்கின்றேன்!
சொல்பற்றிச் சொல்கின்றேன்!
சொல் பற்றிச்சொல்கின்றேன்!!

எண்ணங்கள் ஒலியானபோது
எழுந்த ஒலியே சொல்லானது!
சொல்லும் மொழி எழுத்தானபோது
சொற்கள் எல்லாம் வரியானது!
ஒலியும் வரியும் ஊடாடியபோது
மொழியின் அங்கம் உருவானது!

இங்கே
சொற்கள் என்பது
வெறும் சொற்கள் அல்ல
அது...
சொல்பவனின் அடையாளம்!

ஒருவேளை...ஒருவன்
சொல்லில் சாயம்பூசினால்?!
எப்படி அடையாளமாகும்?!
என்னதான் வர்ணம் பூசினாலும்
எண்ணத்தின் சொல்
எட்டிப் பார்க்காமலா போகும்?!

ஆனாலும்
சொல்லும் சொல்லைவிட
சொல்லே இல்லாத
மௌனம்தானே மதிப்பு வாய்ந்தது!

உண்மைதான்.... ஆனாலும்
உரிமைகள் பறிக்கப்படும்போது
ஊமையாக இருக்கலாமா?
சொல்ல வேண்டியதை
சொல்ல வேண்டிய நேரத்தில்
சொல்லாமல் விடுவது
சொல்குற்றமில்லையா?

ஆக....சொல் நீ சொல்!

அளந்து சொல்
ஆய்ந்து சொல்
இனியதைச் சொல்
ஈவுடன் சொல்
உண்மையைச் சொல்
ஊறு இன்றி சொல்
எளிதாய்ச் சொல்
ஏசாது சொல்
ஐயமின்றி சொல்
ஒன்றைச் சொல்
ஓங்கிச் சொல்
ஔவியமின்றி சொல்
அஃதுன் உயர்குரலில் சொல்
அஃதும் திருக்குறள்போல் சொல்

சொல் புதிது! சுவை புதிது!
சொல்லும் பொருள் புதிது
பாடும் கவி புதிதென
பாரதிபோல் சொல்!

சொல்...இவர்களைப்போல் சொல்!

சொல்லில் பிறழாமையே
கற்பின் நெறியாகும்!
இது யாரும் சொல்லாத சொல்!
இது ஔவையின் சொல்!

வில்லம்பு வேகத்திற்கு
சொல்லம்பே ஈடு!
இதுவும் யாரும் சொல்லாத சொல்!
இது கம்பனின் சொல்!

சொல்...
சொன்னதையே சொல்லாமல்
சொல்லாததைச் சொல்!

அசைகளாள் ஆன சொல்லை
அழகுச்சீராய் அடுக்கி
தளையால் பிணைத்த சொல்லை
கவியால் மாலைகட்டி
மரபின் வழியால் சொல்!
மரபையும் புதிதாய்ச் சொல்!

சொல்....
சொன்னதாய் இருந்தாலும்
சுவையாய்ச் சொல்!
அதையும்
சுருங்கச் சொல்!

No comments: