11/07/2017

கர்ணன் கதை (சுருக்கமாக)

 (அனைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பணம்)






அறிமுகம்
********
நட்பென்று சொன்னாலும்
கொடையென்று சொன்னாலும்
சிந்தையிலே வரும்நாமம்
கர்ணனென்ற திருநாமம்

அன்றுமுதல் இன்றுவரை
அனைவருமே அறிந்த கதை!
அனைவருடைய மனதிலுமே
ஆழமாகப் பதிந்த கதை!

அகிலத்தில் நட்பிற்கு
ஆதாரம் ஆன கதை!
அக்கதையை அடியேனும்
அடிசுருக்கி எழுதுகின்றேன்!

அடிகளிலே பிழையிருப்பின்
அடியேனின் பிழைபொறுத்து
அடிகளையும் எடுத்துரைக்க- உம்
அடிகளையே வணங்குகின்றேன்!

கர்ணனின் பிறப்பு
***************
ஆயர்குல குந்திதேவி
அரியவரம் ஒன்றினாலே
ஆதவனின் ஆசியோடு
ஆனாளே தாயாக!

காதினிலே குண்டலமும்
மார்பினிலே கவசமுமாய்
கதிரவனின் ஒளியாலே
கர்ணனையும் பெற்றாளே!

மணம் செய்யும் முன்னாலே
மகன் வந்த அதிர்ச்சியாலே
மணம் இல்லா மலர்போல
மனம் நொந்து போனாளே!

அறியாமல் செய்தபிழை-பிறர்
அறியாமல் செய்திடவே-விழி
ஆறாக வடிந்திடவே- சேயை
ஆற்றினிலே விட்டாளே!

கர்ணனின் வளர்ப்பு
*****************
தேரோட்டி அதிரதனும்
நீராடும் வேலையிலே-ஆற்று
நீரோடு வந்த சேயை
மார்போடு அணைத்தானே!

சேயில்லா ராதைக்கும்
தாயில்லா சேயுக்கும்
மறுவாழ்வு வந்ததென்று
மனதார மகிழ்ந்தானே!

பாலூட்டா விட்டாலும்
பாசமூட்டி வளர்த்ததாலே
பணிவோடு வளர்ந்தானே!
பண்போடு நடந்தானே!

அரச இனம் நடத்துகின்ற
வில்வித்தை போட்டியிலே
விளையாடும் மனத்தோடு
விருப்போடுச் சென்றானே!

தேரோட்டி மகனுக்கு
வில்போட்டி எதற்கென்று
சொல்கூட்டி பலர்கூற
தரைதட்டி அழுதானே!

அவமானம் தாங்காது
அம்மாவின் மடிவீழ்ந்து
ஓ வென்று அழுதிடவே
ஓடோடிச் சென்றானே!

அவனோட பிறப்புபற்றி
அம்மாவும் அப்பாவும்
அழுதழுது கதைப்பதையும்
அப்படியே கேட்டானே!

அச்செய்தி கேட்டதுமே
அடிமேல் அடியென்று
ஆடித்தான் போனானே
அதிர்ச்சியிலே உறைந்தானே!

அனைத்தையும் மறந்திடவே
அகிலத்தை வென்றிடவே
கலைகள் பல பயின்றிடவே
குரு தேடிச்சென்றானே!

குரு துரோணர் குருகுலத்தில்
குலம்பற்றி வினவிடவே
குலமறியா காரணத்தால்
குரு அவனை மறுத்தாரே!

குரு சொன்ன சொல்லாலே
கோபத்தில் எரிதனலாய்
குருவின் குரு பரசுராமர்
குடில்நோக்கிச் சென்றானே!

சாதிபற்றி பொய்யுரைத்து
சகலவித்தை கற்றானே!
சத்தியவான் பரசுராமர்
சாபத்தையும் பெற்றானே!

துரியோதனனின் நட்பு
******************
கற்றவித்தை காட்டுகின்ற
களப்போட்டி தளத்தினுலே
அகிலத்தில் சிறந்தவனாய்
அர்ச்சுனனை அறிவிக்க.....

"நிறுத்துங்கள்... "எனச் சொல்லி
நின்றானே கர்ணனங்கே!
அறிவிப்பைத் தவறென்றான்...
போட்டிக்குத் தயாரென்றான்...

துன்பத்தின் உச்சத்திலே
துரியோதனன் துவளையிலே
துயர்துடைக்க வந்தவானாய்
துரியோதனன் மகிழ்ந்தானே!

குருகுலத்தில் போட்டியிட
குலத்தகுதி வேண்டுமென்றும்- இல்லை
கோ தகுதி வேண்டுமென்றும்
கர்ணனிடம் கதைத்தனரே!

அங்கிருந்த துரியோதணன்
அனைவரையும் வாயடைத்து
கர்ணன் எந்தன் நண்பனென்றான்!
கர்ணன் இனி அரசனென்றான்!

அவமான மனதிற்கு
அருமருந்து போட்டதாலே
அன்றுமுதல் துரியனையே
அகத்தினிலே பதித்தானே!

கர்ணனின் கொடை
******************
புகுந்த இடம் சரியில்லாது
புளங்காகிதம் அடைந்தாலும்
உயிரும் உடலும் அனைத்தையுமே
துரியனுக்கே தந்தானே!

அதர்மத்தின் கூடாரத்தில்
அறிவுரைகள் உதவாதென்று-தன்
அதர்மத்தை தர்மமாக்க
அள்ளிஅள்ளிக் கொடுத்தானே!

அந்தணர்கள் சூத்திரர்கள்
வந்தவர்கள் நொந்தவர்கள்
அனைவருக்கும் அனைத்தையுமே
அன்போடு கொடுத்தானே!

சகதிசேற்றில் தாமரைபோல்
சதிகாரரில் நல்லவனாய்
கர்ணன் தர்மம் செய்தானே!
கர்மம் அதுவென வாழ்ந்தானே!

பாண்டவர் தோல்வி தவிர்த்திடவே
மாண்டவர் அதர்மி என்றாக்கிடவே
கண்ணனும் திட்டங்கள் தீட்டினானே!
கர்ணனும் திட்டத்தில் மாட்டினானே!

பாண்டவர் தாயாம் குந்திதேவி
பாண்டவர் ஐவரை காத்திடவே
தாமாய் சென்று உண்மைகூறி
தானமாய் வரங்கள் பெற்றாளே!

தாய்கூறும் உண்மைகளால்
தாயின்மேல் கோபம் நீங்கி-அவன்
மடிந்ததுமே மெய்யுறைக்க
மனமருகிக் கேட்டானே!

(வேறு)

அருச்சுனன் உயிரைக் காத்திடவே
இந்திரன் சூழ்ச்சி செய்தானே!
கவசம் குண்டலம் இரண்டையுமே
கர்ணனை அணுகிப் பெற்றானே!

கர்ணனின் உயிரை வீழ்த்திடவே
கர்ணனின் தர்மம் வேண்டுமென்று
கண்ணனும் கொடையாய் கேட்டிடவே
கர்ணனும் தானமாய் தந்தானே!

முடிவு
*****
பாரதப் போரின் உச்சத்திலே
பார்த்த சாரதியின் சூழ்ச்சியிலே
விஜயனின் கடைசி அம்பினிலே
வீழ்ந்தது கர்ணனின் தர்மமன்றோ?

பொதுதர்மம் பூமியில் நிலைத்திடவே
தனிதர்மம் அன்று தோற்றதன்றோ?!
கர்ணனின் தர்மம் தோற்றாலும்
தரணியில் சிறந்தவன் கர்ணனன்றோ?!

----- செ. இராசா------

இந்தக் கவிதையும் என் பக்கத்தில் இருந்து திருடப்பட்டுவிட்டது.....பரவாயில்லை...... அவருக்குத்தான் எத்தனை பின்னூட்டங்கள் மற்றும் பகிர்வுகள்... வியக்கின்றேன்?!!!!!!!!!!!!



1 comment:

Unknown said...

திருடு போகும் அளவுக்கு உங்கள் கவிதை விலை மதிப்பு உள்ளது அண்ணா தங்கம் வைரம் போல அருமை அருமை அண்ணா