11/07/2017

எனக்குத் தெரிஞ்சதெல்லாம்-----களஞ்சியம் கவிதைப் போட்டி-60 (வெற்றிக் கவிதை)


60வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் முதலிடம் பிடித்த கவிதை
வாய்ப்பளித்த சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும் கவிதையை தெரிவு செய்த நடுவர்Kavignar Vaalidhasan
அவர்களுக்கும் ஊக்கம் தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

(மூன்று கவிதைகள் எழுதினேன். தேர்வானது எதுவெனத் தெரியவில்லை. மூன்றையும் பதிவிடுகிறேன்)

https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1890145117971062/

 



(தலைப்பு-1, கவிதை-3)
தலைப்பு: "எனக்குத் தெரிஞ்சதெல்லாம்"
************************************
கவிதை-1:

எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
எழுதிடவே எண்ணமுற்று
எடுத்தேன் நான் கைப்பேசி.
என்னவென்று சொல்லிடுவேன்
என்னவளின் முகமதிலே
ஏளனமாய் நகைக்கிறதே!

என்ன இவன் எழுதிடுவான்?
எதைப்பற்றி விளக்கிடுவான்?
என்றெண்ணி தன்னுள்ளே
ஏளனமாய் நகைக்கிறதோ?!

எழுத்துலகின் ஜாம்பவான்கள்
எழுதுகின்ற தளமதிலே
எளியோனும் எழுதுவதால்
ஏளனமாய் நகைக்கிறதோ?!

எம்பாட்டன் வள்ளுவரும்
எழுதாத எழுத்தினையா
எம்புருசன் எழுதிடுவான்
என்றெண்ணி அதனாலே
ஏளனமாய் நகைக்கிறதோ?!

எம்பாட்டி ஔவையாரும்
எழுதிவைத்த பாடல்போல
எள்ளவும் என்றேனும்
எழுதாத திறனறிந்து
ஏளனமாய் நகைக்கிறதோ?!

எழுத்துலகின் கவியரசர்
எழில்மிகுந்த கண்ணதாசர்
எழுதிவைத்த பாடல்போல
எழுதிடாத தரமறிந்து
ஏளனமாய் நகைக்கிறதோ?!

எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
என்தமிழில் எழுதிடுவேன்
என்னவளே நகைக்காதே!
----------------------------
கவிதை-2
-----------------------------
எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
எள்ளளவு தானென்று
எவ்வுள்ளம் அறிகிறதோ
அவ்வறிவே அறிவாகும்!

அவ்வறிவில் உரமிட்டு
நுண்ணறிவாய் மாற்றிடவே
இறையறிவாம் பேரறிவு
எளிதினிலே புலனாகும்!

மழைநீரின் நிறம்மாறி
மண்நிறத்தைப் பெறுவதுபோல்
பேரறிவும் நிஜம்மாறி
சிற்றறிவாய் தோன்றிடுமே!

கரைபடிந்த சிற்றிவால்
கலங்கியுள்ள இறையறிவு
முறையான பயிற்சியினால்
முயன்றாலே தெளிவாகும்!

எனக்குத் தெரிஞ்சது எல்லாமே
எறும்பின் அளவே என்றறிந்தோர்
அறிவின் எல்லையை விரித்திடவே
அடைவது இறைவனின் நிலையாகும்!

அறிவைக் கூட்டி அன்பைப் பெருக்கி
அகிலம் முழுவதும் இறையைக் கண்டு
அமைதிக் கடலாய் மனத்தை மாற்றி
அறிவே தெய்வம் என்றுணர்வோம்!
----------------------------------
கவிதை-3
----------------------------------
எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
எளிமையும் நேர்மையுமாய்
வாழ்கின்ற வாழ்வினிலே
வசந்தங்கள் கோடி என்பேன்!

இவ்விரண்டு குணங்களையும்
தன்னிரண்டு கண்களாக்கி
இந்தியாவை சிறக்க வைத்த
எத்தனையோ தலைவர்களில்
இதயத்தில் வாழுகின்ற
இருபெரும் தலைவர்களை
இங்கே நானும் எழுதுகின்றேன்!

முதலாமவர் யாரென்றால்?

மேலாடை துறந்தவராய்
ஓராடை தரித்தவராய்
எளிமை நேர்மை வடிவான
சத்தியத்தை பாதுகாத்த
உத்தமரில் உயர்ந்தவராம்
மஹா ஆத்மா காந்தியாவார்!

இரண்டாமவர் யாரென்றால்?

சொந்தவீடு இல்லாதவராய்
சொத்து எதுவும் சேர்க்காதவராய்
எளிமை நேர்மை வடிவான
படிக்காத மேதையான
கர்மவீரர் காமராசர்
கருப்பு நிற காந்தியாவார்!

இரண்டு பேரும் கடைபிடித்த
இரண்டு கொள்கை நமக்கிருந்தால்
இறவா புகழும் அடைந்திடலாம்!
எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
எளிமையும் நேர்மையுமே....
எழுதிவிட்டேன் இத்தளத்தில்
எளிமையோடும்! நேர்மையோடும்!
----------------------------------
செ. இராசா

https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1890145117971062/ 

No comments: