02/07/2017

இரண்டு கோடுகள்


வாழ்க்கை வாழும் முறைமையினை
வரைந்திடும் இரண்டு கோடுகளால்
திரைப்படம் ஒன்றின் வழியாக
பழைய தலைமுறை அறிந்ததுபோல்
புதிய தலைமுறை அறிந்திடவே
உங்களில் ஒருவன் முயல்கின்றேன்!

கோடு ஒன்றை வரைந்துவிட்டு
கோட்டின் அருகில் மறுபடியும்
மற்றொரு கோட்டை வரைந்திடவே
இரண்டாம் கோட்டின் உயரத்தால்
முதலாம் கோட்டின் உயரமும்
சிரிதாய் தெரிந்திடும் அக்கணமே!

ஒப்பீட்டு முறையைக் கையாண்டே
உலகம் உயரத்தைக் கணிப்பதையே
இரண்டு கோட்டில் விளக்குவதாய்
உணர்ந்தேன் உண்மைப் பொருளாக!
உள்ளத்தில் பதிந்த உட்கருத்தை
உரைத்திட இங்கே முயலுகின்றேன்!

அறிவில் சிறந்த அறிஞர்களின்
அறிவின் லட்சியம் அதுவாக
அமைப்போம் பெரிய கோட்டினையே!
அறிவில் என்றும் உயர்ந்தவரை
அகத்தில் என்றும் உயர்வாக
அமர்ந்திடச் செய்வோம் அழகாக!

செல்வம் குறைந்த வறியவரின்
செல்வத்தை நினைத்து பார்த்திடவே
வரைவோம் சிரிய கோட்டினையே!
நமக்கும் கீழே உள்ளவரை
நினைத்துப் பார்த்திடச் சொன்னவரின்
வரிகளை நினைப்போம் ஆழமாக!

செ. இராசா

No comments: